Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்றால் மேலும் மூவர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 222ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மிதிரிகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் வலிப்பு ஆகிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா, இரத்தம் விஷமடைந்தமை மற்றும் சிறுநீரக நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 222 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 255 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய 201 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 54 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 503 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 753 ஆக காணப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 638 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டிலுள்ள 66 கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 623 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 747 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments