Home » » மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மா.தயாபரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மா.தயாபரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

 


மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுனரால் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட மா.தயாபரன் இன்று(07) திங்கட்கிழமை தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகா பெறுப்பேற்றிருந்தார்.


கிராம மட்ட பொது அமைப்புக்களின் அமோக வரவேற்புடன் பட்டாசு கொழுத்தி ஆரவாரத்துடன் அழைத்து வரப்பட்ட ஆணையாளரை மாநகர சபையின் பிரதி மேயர் கந்தசாமி சத்தியசீலன் தமைமையிலான குழுவினர் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

இடம் பெற்ற அமோக வரவேற்பின் பின்னர் புதிய ஆணையாளர் மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், பயன் தரும் மரக்கன்றினையும் நாட்டிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய ஆணையாளர் சுபவேளையில் கையொப்பமிட்டு தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் போது புதிதாக கடமையேற்ற ஆணையாளரை மாநகர சபையின் முதல்வர் தியாகராசா சரவணபவன், பிரதி மேயர், பிரதி ஆணையாளர், அவரது குடும்பத்தார், மாநகர சபை உத்தியோகத்தர்களென பெருமளவானவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

அரச சேவையில் ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் 1990ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர், மத்திய வங்கியின் கிழக்கு மாகாண வறுமை ஒழிப்பு நுண்கடன் திட்டத்தின் கிழக்கு மாகாண முகாமையாளராகவும் அரச துறையில் பல்வேறுபட்ட உயர் பதவிகளை வகித்து வந்த இவர் குச்சவெளி, வெருகல், மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், இறுதியாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் கடமையாற்றி வந்த இவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனரால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநகரசபையின் ஆணையாளராக கடமையாற்ற வந்த க.சித்திரவேல் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தூய்மையான அபிவிருத்தியடைந்த மட்டக்களப்பு மாநகரை கட்டியெழுப்ப பாடுபடுவேன், அத்தோடு எனது கடந்தகால அனுபவத்தை வைத்துக்கொண்டு சிறந்த மக்கள் சேவையினை ஆற்றுவதாகவும், தனது சேவையை திறம்பட ஆற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும், இலங்கையின் மிகச்சிறந்த நகரமாக மட்டக்களப்பு நகரம் மிளிர்வதற்கு மட்டக்களப்பு மக்களும் மிகுந்த பங்களிப்பினை ஆற்ற முன்வரவேண்டுமென கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே புதிய ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |