Home » » படைப்புழுவோடு போராடும் சோளச்செய்கையாளர்களின் பரிதாபம் தீருவது எப்போது?

படைப்புழுவோடு போராடும் சோளச்செய்கையாளர்களின் பரிதாபம் தீருவது எப்போது?

 


படைப்புழுவோடு போராடும் சோளச்செய்கையாளர்களின் பரிதாபம் தீருவது எப்போது?

(செ.துஜியந்தன்)

'மூணுவருசமா இந்தப் படைப்புழுவால் பாதிக்கப்பட்டு கிடக்கிறம். ஏதாவது பயிரைச் செய்துதான் எங்கட குடும்ப சீவியத்தை நடத்திவாறம். முந்தியப் போல இப்பபெல்லாம் காய்,கறி பயிர்களைக்கூட செய்ய முடியாமக் கிடக்குது. க்டன்பட்டு, லோன்வாங்கி தோட்டம் செய்தாலும் அவற்றையெல்லாம் படைப்புழு நாசமாக்கும் இல்லாவிட்டால் காட்டுயானைகள், குரங்குகள் வந்து அழிக்கும். இந்த முறையும் சோளச் செய்கைதான் செய்திருக்கம். அது முழுவதும் பழு கடிச்சு பழுதாப்போயிற்றுது. இந்தப் படைப்புழுக்கு நல்லதொரு மருந்த அரசாங்கம் விரைவில கண்டுபிடிக்கவேணும். படைப்புழுவால் விவசாயிகள் படுறபாட்டை அதிகாரிகளும் கண்டுக்கிற மாதிரியில்ல. பொண்டாட்டிட நகைய அடகுவைச்சு ஒரு ஏக்கரில் சோளச்செய்கை செய்தன். அவ்வளவும் புழுக்கடிச்சு நாசமாக்கிட்டுது. இது இன்றைக்கு நேற்றைக்கு நடக்கல்ல கடந்த மூணுவருசமா இப்படித்தான் நடக்குது. எங்களப்போல விவசாயிகளுக்கு  ஒழுங்கா நஷ்டஈடும் கிடைக்கிறதில்லை. கடனுக்கு மேல கடன்வந்து கழுத்த நெரிக்குது. யாராவது விவசாயிகளுக்கு உதவுங்கப்பா' என்றார் திருக்கோவில் பிரதேசத்தில் சோளச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயி செல்வம்.




தற்போது விவசாயிகளை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கும் விடயமாக சோளச்செய்கைகளை பாதிக்கும் படைப்புழு தாக்கம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2018 ஆம், 2019ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்த படைப்புழுத்தாக்கம் 2020 இலும் தொடர்கின்றமை விவசாயிகளை கவலைகொள்ளச் செய்துள்ளது. விவசாயத்திணைக்களத்தின் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் களப்பயணங்களை மேற்கொண்டுவருகின்ற போதிலும் படைப்புழுவின் தாக்கம் குறைந்தபாடாகத் தெரியவில்லை. கிழக்குமாகாணத்தில் இம்முறை அதிகமான விவசாயிகள் சோளச்செய்கையினை மேற்கொண்டுள்ளனர. குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சோளச்செய்கையினை அதிகம் பயிரிட்டுள்ளனர். அவ் விவசாயிகள் அனைவரும் படைப்புழுவின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

'இன்னும் ஒருவரும் வந்து பார்க்கவில்லை. ஒன்றரை இலட்சம் ரூபா கடன்பட்டுத்தான் சோளச்செய்கையை செய்தன். இதை அறுவடை பண்ணிணாத்தான் கடனை அடைக்கலாம். ஒரு தரம் எண்ணை மருந்து விசுறுனா தாக்கம் குறையும். பிறகு மீண்டும் புழு வருகுது. எண்ணை அடிச்சா ரெண்டு நாளைக்கு நல்லாயிருக்கும். எங்களால ஒன்றும் செய்ய முடியாதிருக்குது.' என கவலைப்பட்டார் விவசாயி சுரேஸ்.

படைப்புழுவானது சோளப் பயிர்ச் செய்கையில் வித்து முளைக்கும் காலத்தில் இருந்து அறுவடை செய்யும் காலம் வரை, பயிரின் பல்வேறு பாகங்களுக்கும் பல்வேறு மட்டங்களில்  சேதத்தினை ஏற்படுத்துகிறது. குறைந்தளவு நேரத்தில் அனைத்தையும் சேதமாக்கும் வல்லமை கொண்டதாகும். வேகத்துக்கு வேகமாக பறக்கக்கூடியதாக இப் புழு காணப்படுகின்றது. கால நிலைக்கேற்ப முட்டைகளையிடும். அதுவும் குளிரான காலநிலையில் உணவு கூடுதலாக தேவைப்படும் நாட்களில் 500 தொடக்கம் 600 முட்டைகளையிடும். குளிர்மை குறைவாக இருந்தால் 250 தொடக்கம் 300 வரையான முட்டைகளையிடும். சோளத்தின் இலையின் மேற்பகுதியில் முட்டைகளை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். இலைகளை வெட்டி மெதுவாக தண்டுக்குள் நுழைகிறது.

புழுக்களை அழிப்பதற்கென்று பல்வேறு இரசாயண மருந்துகள் உள்ளன. இதில் மிமிக், கொறோஜீன், ரேடியம் போன்றவை புழுக்களை உடனே கட்டுப்படுத்தும். அத்துடன் இயற்கை செயற்பாடுகள், பொறிகள் ஊடாகவும் குறைக்கலாம். அத்துடன் தினமும் மாலை வேளையில் தோட்டத்தை அவதானித்து குருத்தினுள் சாம்பல் கலந்த சிறு மணல் இடல், பெரமோன் பொறி, ஒளிப்பொறி என்பவற்றைப் பயன்படுத்தல் தொடர்பாகவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது.   சோளம் பயிரிடப்படும் பகுதியைச் சூழ நேப்பியன் எனும் ஒரு வகை புற்களை பயிரிடுவதன் மூலம் நிறைகுடலிகளை அழிக்கமுடியும். டெல்மூலியம் அல்லது மரவள்ளியும் இதனை எதிர்க்கும் சக்தியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காலங்காலமாக சோளச் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகள் இப்படைப்புழுவினால் கதிகலங்கி நிற்கின்றனர். தினம் வயிற்றுக்காக போராடும் விவசாயிகள் வாழ்வில் தாக்கத்தைச் செலுத்தும் படைப்புழுக்களில் தாக்கத்தில் இருந்து விவசாயிகள் விடுபட்டுவாழ விவசாயத் திணைக்களம் இன்னும் கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |