எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் கூட்டணியால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்படாவிட்டால் தமது கட்சி தனித்து களமிறங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபை தேர்தல்களில் கூட்டணியாக செயல்படுவீர்களா என்பது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
நாடாளுமன்றத் தேர்தலின் போது எமது கட்சி பாரிய அநீதியை எதிர்கொண்டது. இந்த அநீதி மாகாணசபை தேர்தலிலும் தொடருமானால் கட்சிக்கு கீழ்நிலை உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சனைகள் தோன்றக்கூடும்.
மாகாணசபை தேர்தல்கள் முன்கூட்டியே நடத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே அதனை நடத்தவேண்டுமா என்பது தொடர்பில் அரசாங்கம் விவாதித்து வருகிறது.
இந்தநிலையிலேயே மைத்திரிபாலவின் கருத்து வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா, கம்பஹா உட்பட்ட பல இடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆளும் கூட்டணியினால் அநீதி இழைக்கப்பட்டதாகவும் மைத்திரிபால குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது கட்சி வேட்பாளர் பட்டியலின்படி அனுமதி வழங்கப்பட்டிருந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் 25 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்;. தற்போது அது 14ஆக உள்ளது என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
0 comments: