Home » » கிழக்கில் 994 பேருக்கு கொரோனா தொற்று; 05 பேர் உயிரிழப்பு- மக்களை கடுமையாக எச்சரிக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்!!

கிழக்கில் 994 பேருக்கு கொரோனா தொற்று; 05 பேர் உயிரிழப்பு- மக்களை கடுமையாக எச்சரிக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்!!

 


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 994ஆக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.


இதில் கிண்ணியா பகுதியில் ஒருவருக்கும், மூதூர் பகுதியில் 06 பேருக்கும், திருகோணமலையில் 02 பேருக்கும், சாய்ந்தமருது பகுதியில் ஒருவருக்கும், அட்டாளைச்சேனையில் 05 பேருக்கும், பொத்துவில் பகுதியில் 06 பேருக்கும், காத்தான்குடியில் 07 பேருக்கும், ஆரையம்பதியில் ஒருவருக்கும், அம்பாறை உகணையில் ஒருவருக்குமாக மொத்தமாக 30 பேருக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் 122 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 131 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 24 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 717 பேருக்குமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 528 பேர் பூரணகுணமடைந்துள்ளதுடன் 485 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றதாகவும், இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 4பேரும், மட்டக்களப்பு காத்தான்குடியில் ஒருவருமான மொத்தம் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாகவும் அங்கு இன்று அல்லது நாளை அப்பிரதேசத்தை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கிழக்கு மாகாண சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், கிராமங்கள் தோறும் ஐந்து பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டு வெளியிடங்களில் இருந்து வருவோரை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எனினும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதுவும் செய்ய முடியாது உள்ளதாகவும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் இதன் போது மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சுகாதார பணிமனையானது தொடர்ந்தும் கொரோனா ஒழிப்புக்காக பாடுபட்டு வருவதாகவும், ஒரு மாவட்டமோ அல்லது பிரதேசமோ என்று பாராமல் கிழக்கு மாகாணம் என்ற ஒரு நிலையிலேயே கொரோனா ஒழிப்புக்காக சுகாதார நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், அந்த அந்த சுகாதார அதிகாரி பிரிவில் உள்ளவர்கள் உரிய முறையில் சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொது மக்கள் செல்லும் இடங்களில் தொடர்ந்தும் முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறும், சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடிக்குமாறும், தனிமைப்படுத்தல் சட்டங்களை சரியாக கடைப்பிடிக்குமாறும், பொது சுகாதார அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும், தேவையில்லாது வெளியில் நடமாடுவத்தை தவிர்க்குமாறும் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |