Home » » பிரதமர் பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரை

பிரதமர் பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரை

 


2020 வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மீதான இரண்டாவது வாசிப்பை இந்த மேலான சபைக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.


நான் நிதி அமைச்சர் என்ற வகையில் இவ் ஒதுக்கீட்டுச் சட்டத்தை சமர்ப்பிப்பது 11 ஆவது தடவையாக இருக்கின்ற போதிலும், இதுவரை இப்பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீடுச் சட்டங்களிலும் பார்க்க இது வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஏனெனில், இது 04 இடைக்கால வாக்குப்பதிவுக் கணக்குகளை உள்ளடக்கிய ஒதுக்கீட்டுச் சட்டமாகவும், இதனுடன் தொடர்புபட்டதாக எமது அரசாங்கத்தின் அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான கணக்கு அறிக்கையொன்றாகவும் இவ் ஒதுக்கீட்டுச் சட்டம் இருப்பதனால் ஆகும்.

2019 நவம்பர் மாதம் 16 ஆந் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள் 69 இலட்சம் வாக்குகளுடன் அதாவது 52.25 சதவீத வாக்குகளுடன் மக்கள் ஆணையைப் பெற்று இந் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அத் தருணத்தில் அப்போதிருந்த அரசாங்கம் 2020 ஆம் வருடத்திற்காக ஒதுக்கீட்டுச் சட்டமொன்றை சமர்ப்பித்திருக்கவில்லை. தேர்தலின் பின்னர் அதனை சமர்ப்பிக்கும் எதிர்பார்ப்புடன் இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அப்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினைக் கொண்டிராத நாம் பாராளுமன்ற தேர்தலொன்றை எதிர்பார்த்த வண்ணம் அரசாங்கமொன்றை அமைத்து, இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கிற்கு ஏற்ப வரவு செலவுகளை முகாமை செய்தோம்.

2020 மார்ச் மாதம் 02 ஆந் திகதி பாராளுமன்ற தேர்தல் திகதி குறிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியலமைப்பின் 150 (இ) உறுப்புரையின் பிரகாரம் ஜூன் – ஆகஸ்ட் காலப்பகுதிக்காக இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கொன்றை நிறைவேற்ற அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அங்கீகாரம் வழங்கினார்.

நாட்டில் நிலவிய கொரோனா தொற்றுநோய் பரவலைக் கவனத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணையாளரினால் இத்தேர்தல் ஆகஸ்ட் மாதம் வரை பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் ஜுலை –செப்டம்பர் காலப்பகுதிக்காக மீண்டுமொரு தடவை இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கொன்று அங்கீகரிக்கப்பட்டது.

2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 59.09 சதவீத வாக்காளர்களின் விருப்பத்துடன் 149 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கத்தை எம்மால் நிறுவ முடிந்ததுடன், இம் மேலான சபையில் சபாநாயகராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டீர்கள்.

அங்கீகரிக்கப்பட்டிருந்த இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்குகளுக்குரிய காலப்பகுதியில் 2020 வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமொன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு போதிய காலம் இல்லாதிருந்ததால், 2020 ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சர் என்ற வகையில் செப்டம்பர் மாதம் தொடக்கம் 04 மாத காலப்பகுதிக்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கிற்கு இவ் உயர் சபை அங்கீகாரம் வழங்கியது. அதற்கமைய, 2020 வருடத்தில் 04 இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்குகளின் மூலம் அரசாங்க நிதி முகாமை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், அங்கீகரிக்கப்பட்டுள்ள செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்குமே இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கொன்றினால் முடியும். இதனால் அரசாங்கமொன்றுக்கு குறிப்பாக தெளிவான மக்கள் ஆணையைப் பெற்று மாற்றமொன்றைச் செய்யும் எதிர்பார்ப்புடன் நியமிக்கப்டுகின்ற புதிய அரசாங்கமொன்றுக்கு புதிய வேலைத்திட்டங்களை அமுல் செய்வதற்குள்ள வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுகின்றது. எனவே, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பொதுஜன முன்னணி அரசாங்கம், அதன் முதலாவது வருடத்தில், இதற்கு முன் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களிலும் பார்க்க வேறுபட்ட வித்தியாசமான சவால்மிகு நிலைமைகளுக்கு முகங்கொடுத்தது என்பதை இம்மேலான சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

தற்சமயம் உலகின் ஒவ்வொரு நாடும் கொறோனா தொற்றுநோய் காரணமாக பாரிய பின்னடைவினைச் சந்தித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) அண்மையில் வெளியிடப்பட்ட (World Economic Outlook 20th October 2020) அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப் பின்னடைவைத் தொடர்ந்து உலகின் பிரதான பொருளாதாரங்கள் அனைத்தும் எதிர்மறை, பொருளாதார வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன. எமது வலயத்தின் பிரதான பொருளாதாரமாக விளக்குகின்ற இந்தியாவின் பொருளாதாரம் 10.3 சதவீத வீழ்ச்சியை அடையுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. உயர் பொருளாதார வளர்ச்சியைப் பேணி உலகின் இரண்டாவது பொருளாதாரமாக முன்னோக்கி வந்துள்ள சீனா சார்பில் சர்வதேச நாணய நிதியம் 1.9 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எதிர்பார்த்து நிற்கின்றது. உலகின் பலம் பொருந்திய பொருளாதாரமாக விளங்குகின்ற ஐக்கிய அமெரிக்கா கூட 4.3 சதவீத பின்னடைவைக் காட்டுவதுடன். ஐரோப்பிய பலம் பொருந்திய நாடுகளுட்பட அவ்வலயம் 8.3 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.6 சதவீத எதிர்மறை பெறுமதியை காட்டுகின்றது என்பதையும் இவ்வேளையில் சுட்டிக் காட்டுகின்றது.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில், பொருளாதார வீழ்ச்சிக்கு மேலதிகமாக கொறொனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த கணிசமானோரை நோக்கும் போது இத் தொற்றுநோயின் பயங்கரத்தை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாது அந்நாடுகளின் சுகாதார மற்றும் அரசாங்க சேவைகளின் கொள்ளளவு போதியதளவு காணப்படாமையும் இதன் மூலம் தெளிவாகின்றது. அதே போன்று சுகாதார மற்றும் சமூக சேமநல தேவைகளை சந்தைப் பொருளாதாரத்தினுள் மட்டும் நிறைவேற்றிக் கொள்வதற்கான வரையறையினையும் சுட்டிக் காட்டுகின்றேன்.

எமது நாட்டினதும் எமது அரசாங்கத்தினதும் விசேட அம்சம் யாதெனில், இலவச சுகாதார மற்றும் சமூக சேமநலனை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளமையாகும். 2020 பொதுத் தேர்தலில் இந்நாட்டின் அறுதிப் பெரும்பான்மை மக்கள், எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த 2015 – 2019 அரசைப் போலல்லாது நாட்டைக் கட்டியெழுப்பும் ”சுபீட்சத்தின் நோக்கு” என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தினுள் எமது அரசாங்கம் சந்தை வரையறைகளை இனங்கண்டு அரச துறையில் பரந்த அளவில் பணிகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணித்துள்ள அரசாங்கமொன்றாக செயற்பட்டு வருகின்றது. எதிர்பாரா இரண்டாவது அலையின் பாதிப்புகளையும் தாங்கிய வண்ணம், உயிர் இழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் எம்மைக் காட்டிலும் முன்னணியிலுள்ள பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடும் போது இறப்பு வீதம் 0.3% சதவீதம் என்ற ஆகக் குறைந்த மட்டத்தில் பேணி, நோய் ஒழிப்பிலும் தனிமைப்படுத்தல் தொழிற்பாட்டிலும் எமக்கு முன்னணியில் திகழ்வதற்கு முடிந்திருப்பது இதன் காரணமாகவே.

இதற்குப் பிரதான காரணம், எமது நாட்டில் சகல பிரதேசங்களிலும் அமுல் செய்யப்படுகின்ற இலவச சுகாதார முறைமையும், சுகாதார சேவையும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்த நெருக்கடியான காலப்பகுதியில் சுகாதார சேவையை பலப்படுத்திய வண்ணம் எமது நாட்டின் அரச சேவை, பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்ற மேலான சேவைகளை நோக்கும் போது, அச் சேவைகளின் தேசிய முக்கியத்துவம் இந்த மேலான சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட வேண்டுமென நான் நம்புகிறேன். அரச நிதித் தத்துவம் அளிக்கப்பட்டுள்ள இப் பாராளுமன்றம், இவ் அங்கீகாரத்தினை வழங்குவது மட்டுமல்லாது, இலவச சுகாதார சேவைகளை நாடு முழுவதும் மென்மேலும் வலுவானதாக பேணிச் செல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஒருமித்த குரலில் உறுதிப்படுத்திய வண்ணமே இச் சேவைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும்.

இடைக்கால வாக்குப் பதிவு கணக்குகளிலுள்ள வரையறைகளுக்குட்பட்ட கீழ் அதே போன்று, எமது பலவீனமான வரவு செலவுத்திட்ட மற்றும் பொருளாதாரத்திற்கு மத்தியிலும் கூட கொறோனா வைரஸ் தொற்றை முகாமை செய்வதற்கு பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை அடையாளம் காணல், தனிமைப்படுத்தல், பரிசோதனைகள் மற்றும் இவை சார்ந்த சேம நலன் நடவடிக்கைகளுக்காக இதுவரை அரசாங்கம் செலவிட்டுள்ள தொகை சுமார் 70,000 மில்லியன் ரூபாவாகும். நோய் நிவாரண பணிகளுக்காக கொழும்பிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வைத்தியசாலை கொள்ளளவை ஒரு வருடத்திற்கும் குறைந்த காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களும் உட்படுமாறு 17 வைத்தியசாலைகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் பீடித்தவர்களுக்கு விசேட சிகிச்சைகளை அளிப்பதற்கான கட்டில்களின் எண்ணிக்கை சுமார் 600 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நோய் பரிசோதனைக்கான PCR கொள்ளளவை நாளொன்றுக்கு 7,500 – 10,000 வரை அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதுடன், இங்கு ஒரு PCR பரிசோதனைக்கான செலவு ரூபா 6,000 என்ற வகையில் ஒரு நாளுக்கான செலவு 50 மில்லியன் ரூபாவை தாண்டுகின்றது. 14 நாள் நோய் நிவாரணத்திற்கு உட்படுத்தப்படுகின்றவர்களின் உணவு மற்றும் சேமநலன் நடவடிக்கைகளுக்காகவும் அரசு பெருந் தொகைப் பணத்தை செலவு செய்கின்றது. இதனிடையே கொறோனா தொற்று நோய் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 5,000 கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. இச் செலவுகளுக்கு மேலதிகமாக, இச் சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளுக்காகவும், பிற செலவினங்களுக்காகவும் செலவு செய்வதற்கும் அரசுக்கு நேர்ந்துள்ளது. அதே போன்று, எமது நாட்டின் ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற துறைகளிலும் இந் நிலைமை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, வெளிநாட்டு வருமானம், தொழில் வாய்ப்பு, வாழ்வாதாரங்கள், தனியார் தொழில் முயற்சிகள் மற்றும் அரசாங்க வருமானம் போன்றவற்றில் மட்டுமல்லாது மக்களின் சமய, சமூக வாழ்விலும் பாரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

எமது பொருளாதாரமும் நிதி நிலைமையும் மிக மோசமானதாகவே உள்ளது. வரவுக்கும் செலவுக்குமிடையிலான இடைவெளியினை அடிப்படையாகக் கொண்டு இவ்விடயத்தை நோக்குவோமாயின், 2014 இல் இருந்த எனது அரசாங்கம் தேசிய வருமானத்தில் 5.7 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டிருந்த வரவு செலவு திட்டப் பற்றாக்குறைக்குப் பதிலாக, எமக்கு 2019 இல் 9.6 சதவீத வரவு செலவு திட்டப் பற்றாக்குறையுடனேயே எம் மீது சுமத்தப்பட்டது. இது 2005 ஆம் வருடத்தில் நான் அரசைப் பொறுப்பேற்கும் போது காணப்பட்ட 7 சதவீத பற்றாக்குறையினைக் காட்டிலும் அதிகமாகும். 2015 ஆம் வருடத்திற்காக நான் 2014 இல் முன்வைத்த வரவு செலவுத்திட்டத்தில் பிரதான நோக்கமாக இருந்தது யாதெனில், 2020 ஆம் வருடமாகும் போது வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை 4 சதவீதத்திற்கு குறைக்கும் அதேவேளை, எமது நாட்டை வறுமையற்ற உயர் வருமானம் பெறும் நாடாக மாற்றுவதாகும்.

கடந்த வருடங்களில், வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை நிரப்பும் போது கடைபிடிக்கப்பட்ட பிரதான விடயமாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செலவுகளுக்கான கொடுப்பனவுகளை பல வருடங்களாக வழங்குநர்கள் மற்றும் பயனாளிகளுக்கு செலுத்தாதிருந்தமையாகும். இவ்வாறு செலுத்தாதிருந்த நிலுவைத் தொகை 243 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதுடன், வெளிநாட்டுக் கடன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்த செலவினங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும் தாண்டி இருந்ததனால் கணக்குப் பதிவு மேற்கொள்ளப்படாத அத்தொகை 212 பில்லியன் ரூபாவாகும்.

இதன் காரணமாக அறிக்கையிடப்பட்டுள்ள வரவு செலவு பற்றாக்குறையும் உண்மையான அரச நிதி நிலைமையினை மறைப்பதாக இருக்கும். அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவின இடைவெளி மூலம் மறைக்கப்பட்ட 23.9 பில்லியன் ரூபா உரத்திற்கான நிலுவைத் தொகை, மருந்துகளைக் கொள்வனவு செய்யும்போது தீர்க்கப்படாதிருந்த 31.4 பில்லியன் ரூபா, நிர்மாணக் கைத்தொழிலின் போது செலுத்தப்படாதிருந்த 119 பில்லியன் ரூபா, சிரேட்ட பிரசைகளுக்கான வட்டி நிவாரணத் தொகை 45.8 பில்லியன் ரூபா மற்றும் பல்வேறு அமைச்சுகளுக்கும் சேவைகளை வழங்கியமைக்காக செலுத்தப்படாதிருந்த 22.1 பில்லியன் ரூபா என்பன உள்ளடங்கும். இதனை கடந்த அரசாங்கம் அரச நிதி முகாமைத்துவத்தின் மூலம் செய்த பிரதான பொறுப்பற்ற செயலாக நான் பார்க்கிறேன். இவ்வாறு பணம் செலுத்தாமையினால், நிர்மாண கைத்தொழிலாளர்கள், உரம் மற்றும் மருந்து வழங்குநர்கள், வட்டி நிவாரணத்தின் மீது வாழும் முதியோர்கள் முகங்கொடுத்திருந்த கஷ்டங்கள் என்பன பின்னடைவு பொருளாதாரத்தை உண்டு பண்ணுவதற்கு காரணமாக அமைந்தன.

இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்குகளின் வரையறைகள் மற்றும் கொறோனா தொற்று தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள செலவினங்களுக்கு மேலதிகமாக, 2014 இல் தேசிய வருமானத்தில் 70 சதவீதமாகக் காணப்பட்ட அரசாங்கக் கடன் 2019 ஆகும் போது 85 சதவீதமாக அதிகரித்திருப்பது, அப்போதைய இலங்கை மத்திய வங்கி ஆளுனரினால் நியாயப்படுத்தப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் விற்பனை செய்தமைக்கு மேலதிகமாகவாகும். அத் துறைமுகத்திற்காக ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டியிருந்த கடன் சேவைகளின் பெறுமதி 90 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த போதிலும், முழு துறைமுகத்தையும் விற்றுப் பெற்றுக் கொன்ட 1200 மில்லியன் அமெரிக்க டொலரைக் கொண்டு அத் துறைமுகத்துக்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் திருப்பி செலுத்தப்பட்டிருக்கவும் இல்லை. இன்றும் திறைசேரியானது சீன எக்ஸ்சிம் வங்கிக்கு வருடாந்தம் இக் கடனைச் செலுத்தி வருகின்றது. துறைமுகத்தை விற்றுப் பெற்றுக் கொண்ட பணம் அன்றாட வரவு செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2020 தொடக்கம் வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன் சேவையின் அளவு சுமார் 4,200 மில்லியன் அமெரிக்க டொலராகும். எதிர்க் கட்சியினரும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களும், எமது நாட்டை பாரிய கடன் வலையில் சிக்கி கடன் சேவைகளை செலுத்தாது தட்டிக் கழிக்கின்ற நாடாகவே எதிர்வு கூறினர்.

அவர்களது எதிர்வு கூறல்கள் மூலம் காட்டப்பட்ட இருண்ட உருவத்திற்குப் பதிலாக எமது அரசாங்கம் 2020 வருடத்திற்காக செலுத்த வேண்டியிருந்த வெளிநாட்டுக் கடன் அனைத்தையும் செலுத்தினோம் என்பதை இந்த மேலான சபைக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேவையற்ற விதத்தில் வெளிநாட்டுக் கடன் பெறுகையை குறைத்தலும் அதைப் போன்று இறக்குமதிகளை ஓரளவிற்கேனும் முகாமை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சி அதே போன்று கடன் பீதியை வெறுமனே நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கும் புதிய தாராளவாதக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட உபாய வழிகளாக நாம் நன்கு புரிந்து கொண்டமையினால் தான் எம்மால் இதனைச் செய்ய முடிந்தது.

கடந்த 5 வருட காலப்பகுதியில் முதலீடுகளைச் செய்து உற்பத்திக் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் மின்னுற்பத்தி கருத்திட்டமொன்றோ, குளங்களோ, நீர்த்தேக்கங்களோ, நீர் வழங்கல் கருத்திட்டமொன்றோ, புகையிரதப் பாதை, அதிவேகப் பாதை, பாலம் நகர வீடமைப்பு கருத்திட்டம், துறைமுக நகரம் அல்லது பொருளாதார வலயம், மீன்பிடித் துறைமுகம் போன்ற எவையும் ஆரம்பிக்கப்படவில்லை. கிராமங்களைக் கட்டியெழுப்புவதற்கு திட்டமிடப்பட்ட “கம்பெறலிய” மூலம் கட்டியெழுப்பப்பட்ட கிராமமொன்றை காண்பதற்கில்லை. உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேயிலை, தெங்கு, இறப்பர், கறுவா, மிளகு போன்ற உற்பத்திகளை ஏற்றுமதிச் சந்தைக்கு அனுப்புவதற்குப் பதிலாக அவற்றை வெளிநாடுகளிலிருந்து தருவித்து மீள் ஏற்றுமதி செய்வதற்கு முனைந்ததினூடாக பெருந்தோட்டத் துறைக்கு மோசமான பாதிப்பு உண்டு பண்ணப்பட்டது.

உயர் நடுத்தர வருமானமுடைய நாடொன்றுக்குப் பதிலாக, தனிநபர் வருமானம் 4,000 அமெரிக்க டொலராக எவ்வித முன்னேற்றமுமின்றி ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்தது. சுமார் 6% சதவீத வருடாந்த வளர்ச்சி வேகத்தைப் பேணி வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2015 தொடக்கம் வருடா வருடம் குறைந்து சென்று, 2019 இல் 2.3% சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது. இது தெற்காசியாவில் ஆகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும். வலயத்தில் ஆகக் குறைந்த வளர்ச்சி வேகத்திற்கு கடந்த 5 வருட காலப்பகுதியில் எமது நாட்டை இட்டுச் சென்றதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாட்டின் சனத்தொகையில் சுமார் 40 சதவீதமானோர் வாழுகின்ற கிராமிய பொருளாதாரமானது, தாராளவாத பொருளாதாரக் கொள்கையினால் தோற்றுவிக்கப்பட்ட இறக்குமதி வர்த்தகத்தினால் பலவீனமடையச் செய்யப்பட்டதென்பது இரகசியமானதல்ல.

ஏற்றுமதிக்குப் பதிலாக இறக்குமதியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையொன்றை பின்பற்றுவதன் விளைவு என்னவெனில், நாடு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக நிலுவையினுள் சிக்கித் தவிப்பதாகும். கடந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வெற்றியளிக்காத பொருளாதார மற்றும் நிதி முகாமைத்துவம், அதேபோன்று உண்மையான உற்பத்திப் பொருளாதாரத்திற்குப் பதிலாக இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற வர்த்தகப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே இந்த மோசமான நிலைமைக்கு காரணமென்பதை இப்போது ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

2010 இல் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மூலமாக ஈட்டப்பட்ட 4,000 மில்லியன் அந்நியச் செலாவணி வருமானத்தை, 2014 ஆம் வருடமாகும் போது 7,000 மில்லியன் அமெரிக்க டொலராக நாம் அதிகரித்திருந்தோம். இத் துறையில் அந்நியச் செலாவணி வருமானம் 6,700 மில்லியன் அமெரிக்க டொலர் வரை குறைந்திருந்தது. தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் பலவீனத்திற்கு மத்தியில் தலை தூக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பத்து வருட காலமாக தொடர்ச்சியாக வளர்ச்சி கண்ட சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்தது. வரி விதிப்பு முறையில் சிக்கல் காரணமாக மக்கள் மீது கூடிய வரிச் சுமை சுமத்தப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் தேசிய தொழில் முயற்சிகளை இந்த வரிச்சுமை பலவீனமடையச் செய்தது. கடன் வட்டி வீதம் 14 சதவீதத்திலிருந்து 17 சதவீதமான உயர்ந்த மட்டத்திற்கு அதிகரித்துச் சென்றதுடன் அந்நியச் செலாவணி வீதம் விரைவாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக வியாபாரச் சூழல் நிச்சயமற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. 2014 தேசிய வருமானத்தில் 32.3 சதவீதமாகவிருந்த மொத்த முதலீடு 2019 ஆம் வருடமாகும் போது 27.4 சதவீதமாக குறைந்து சென்று சுமார் 483,000 தொழிலின்மைக்கு நாடு தள்ளப்பட்டமையின் விளைவானது பொருளாதாரத்தில் ஏற்பட்ட தோல்வியினை மிகத் தெளிவாகக் காட்டியது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கூட 2020 ஆம் வருடத்தில் நாம் நிறைவேற்றிய பணிகளோ கொஞ்ச நஞ்சமல்ல. இவற்றுள், பல வருடங்களாக தொழில் வாய்ப்பின்றி இருந்த 60,000 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சனையை தீர்த்து வைத்தமை பிரதானமானதாகும். அதே போன்று எமது நாட்டில் வறுமை நிலையிலுள்ள ஓர் இலட்சம் குடும்பங்களை இலக்காகக் கொண்டு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்க் கூட இது வரை சுமார் 40,000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருடம் முடிவதற்கு முன் ஓர் இலட்சம் இலக்கை அடைவதே எமது நோக்கமாகும்.

17 சதவீதமாகக் காணப்பட பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவற்றை 8 சதவீதத்துக்குக் குறைத்தல். ரூபா 25 மில்லியனுக்கு குறைவான புரள்வைக் கொண்ட (முன்னர் மாதத்திற்கு ரூபா 1 மில்லியன்) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை பெறுமதி சேர் வரியிலிருந்து விடுவித்தல், விவசாயம், பெருந்தோட்டப் பயிர், கால் நடை வளர்ப்பு மற்றும் விவசாயப் பண்ணை என்பவற்றை வருமான வரியிலிருந்து விடுவித்து தகவல் தொழில் நுட்ப மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பாத்தியங்களை வருமான வரியிலிருந்து விடுவித்தோம். திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளின் வருடாந்த வட்டி வீதத்தை சுமார் 15 சதவீதத்திலிருந்து சுமார் 5 சதவீதத்திற்கு குறைத்ததன் மூலம் நாட்டின் கடன் வட்டி அழுத்தத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்த அரச மற்றும் தனியார் தொழில் முயற்சிகளுக்காக வங்கிகளூடாக சுமார் 250 பில்லியன் கடன் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த அந்நியச் செலாவணி வீதத்தை ரூபா 185 என்ற மட்டத்தில் நிலையாகப் பேணிச் செல்வதற்கும், 4,200 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் சேவைகளை 2020 ஆம் வருடத்தில் செலுத்தி, கடனைச் செலுத்துவதற்கு மறுக்கும் நிலைக்கு தள்ளப்படாது இருப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்தோம். நெல்லுக்காக ரூபா 50 என்ற உத்தரவாத விலையை நடைமுறைப்படுத்தல் மற்றும் அரிசி இறக்குமதியை நிறுத்துதல் என்பதுடன் நெல், சோளம், தானிய வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் முதலான உற்பத்திகளை விஸ்தரிக்கும் வகையில் கவர்ச்சிகரமான உத்தரவாத விலையை நியமிப்பதற்கு இறக்குமதி வரி முகாமை செய்யப்பட்டது. ஓர் இலட்சம் கிலோ மீற்றர் வீதிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீற்றர் என்ற 3 கருத்திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருவதுடன் போக்குவரத்து நெரிசல்களை நீக்கும் வகையில் சுமார் 10,000 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், இவற்றுள் 5,000 பாலங்களின் வேலைகள் பூர்த்தியடையும் தருவாயில் காணப்படுகின்றன. “யாவருக்கும் நீர்” கருத்திட்டத்தின் கீழ் 429,000 வீடுகளுக்கு நீர் வழங்கல் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், 100,000 நகர வீடுகளை இலக்காகக் கொண்ட நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுள் நிர்மாணிக்கப்படுகின்ற முதலாவது 20,000 அலகுகளை உடைய கருத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மருந்து வகைகள், உரம் மற்றும் நிர்மாணக் கைத்தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாதிருந்த நிலுவைத் தொகைகளும் இந்த இடைக்கால வாக்குப் பதிவுக் கணக்கு மூலம் செலுத்தப்பட்டதுடன், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் 2020 ஒதுக்கீட்டுச் சட்டத்தினுள் அடங்கும். அரச தொழில் முயற்சிகளை தனியார் மயப்படுத்தலுக்குப் பதிலாக அவற்றை பலப்படுத்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். இவ்வாறான தொழில் முயற்சிகளைப் பலப்படுத்துவதற்காக தொழில் நிபுணத்துவத்தைக் கொண்ட பணிப்பாளர் சபைகள் நியமிக்கப் பட்டிருப்பதுடன், இவற்றைப் பலப்படுத்துவதற்குத் தேவையான அரச மூலதனத்தை ஈடுபடுத்துவதும் முக்கியமானதாகும்.

ஶ்ரீலங்கன் விமான சேவை தேசத்தின் விமான சேவையாகும். இதனைப் பலப்படுத்துவதற்கு 2013 வருடம் தொடக்கம் ஐந்து வருட காலப்பகுதியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மூலதனமிடும் வேலைத்திட்டம் 2015 இல் இடை நிறுத்தப்பட்டதனாலும் இதனை தனியார் மயப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாகவும் இச்சேவை நிதிப் பற்றாக்குறையினால் பலவீனமடைந்துள்ளது. இதற்கான மூலதனத்தை மத்திய கால அடிப்படையில் 500 மில்லியன் டொலரை இடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், 2020 வருடத்தில் 150 மில்லியன் டொலரைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், 2020 ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு சில செலவினத் தலைப்புகள் திருத்தப்படுவதுடன் அவற்றை இச்சபையில் முன்வைக்கின்றேன். இச் செலவினத் திருத்தங்களுடன் 2020 ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் பெறுகை எல்லையை 180 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதற்கு யோசனையை முன்வைக்கின்றேன். அத்துடன் 2020 வருடத்திற்கான வரவு செலவுப் பொழிப்பையும் கடன் பெறும் எல்லை குறிப்பிடப்பட்ட குறிப்பையும் இத்துடன் சபையில் முன்வைக்கின்றேன். அதேவேளை, 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தில் அடங்கியுள்ள பிணை வரையறையினை 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கும் முன்மொழிகின்றேன்.

எமது அரசாங்கத்தின் வரவு செலவுக் கொள்கையின் உள்ளடக்கம் யாதெனில் கடந்த 5 வருட காலப்பகுதியில் காணப்பட்ட சமூகப் பொருளாதார அழிவுப் பாதையை மாற்றியமைப்பதாகும். எமது நாட்டின் பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வழிவுப் பாதையிலிருந்து கட்டாயமாக மீள வேண்டியுள்ளது. தற்போது காணப்படுகின்ற சுமார் 10 சதவீத வரவுக்கும் செலவுக்குமிடையிலான இடைவெளியை 2025 வருடமாகும் போது 4 சதவீதத்திற்கு குறைப்பதும் அதே போன்று ஒட்டு மொத்தக் கடனை 75 சதவீதத்திற்கு அடுத்து வரக் கூடிய 4 வருட காலப்பகுதியில் குறைப்பதும் எமது அரசாங்கத்தின் அரசிறைப் பொறுப்பாகும். ஏற்றுமதி அதே போன்று நமக்கு நாமே உற்பத்தி செய்து இறக்குமதியினைக் குறைக்கின்ற உற்பத்திப் பொருளாதாரமொன்றின் மீது நம்பிக்கை வைப்பது தேசிய முன்னுரிமையாக காணப்படுகின்றது. ஆடைக் கைத்தொழில் மற்றும் தேயிலை மீது மட்டும் தங்கியிருக்கின்ற ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தாது, ஏற்றுமதியைப் போன்று இரட்டிப்பு மடங்கு இறக்குமதி செய்து, உள்ளூர் வளங்களுக்கும் மூலப்பொருட்களுக்கும் பெறுமதியைச் சேர்க்காத வர்த்தகப் பொருளாதாரமொன்று நிலைபேறான அபிவிருத்தியை உண்டுபண்ணாது. விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை என்பவற்றிலிருந்து உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயக் கைத்தொழிலும் அவற்றுடன் தொடர்புபட்ட ஏனைய சேவைகளை தோற்றுவிக்காது இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற நுகர்வு மற்றும் கைத்தொழில் மூலம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற அபிவிருத்தியொன்று ஏற்படப் போவதில்லை. எதிர் மறைப் பொருளாதாரத்தை 6 சதவீத நேர்மறை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டுவருவது மட்டுமல்லாது அதற்குச் சமாந்தரமாக மற்றும் அதன் விளைவாக வறுமையை ஒழிக்க வேண்டியுள்ளது. அது அதி மேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனம் என்பதை நான் இந்த மேலான சபைக்கு ஞாபக மூட்டுகின்றேன்.

2020 நவம்பர் மாதம் 17 ஆந் திகதி நான் இந்த மேலான சபைக்கு சமர்ப்பிக்கின்ற 2021 வரவு செலவுத்திட்ட உரையின் மூலம் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தினூடாக எமது நாட்டில் நவீன பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்கான யோசனைகளை முன்வைக்கவுள்ளேன்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |