Home » » இன்று முதல் மீண்டும் அமுலாகும் அரச ஊழியர்களுக்கான புதிய நடைமுறை...!!

இன்று முதல் மீண்டும் அமுலாகும் அரச ஊழியர்களுக்கான புதிய நடைமுறை...!!

 


அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று (02) முதல் அமுலுக்கு வருவதாக பொதுநிர்வாக சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வீட்டில் இருந்தே பணியாற்றும் முறைமையை மீண்டும் அமுல்படுத்துமாறு மேல் மாகாணம் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களிலுள்ள அரச நிறுவனங்களுக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பிலான சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனைத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த மாவட்டங்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அபாய வலயமாக பெயரிடப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள அரச நிறுவனங்களில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தே பணியாற்றும் செயற்றிட்டத்தின் அனுபவத்தை பயன்படுத்தி, அத்தியாவசிய மற்றும் ஏனைய சேவைகளை திட்டமிட்டு செயற்படுத்துமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலை ​8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் குறித்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே பணியாற்றும் முறைமையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மாற்று தொடர்பாடல் வசதிகளையும் பயன்படுத்த முடியும் என சுற்றுநிரூபத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல், மின்னஞ்சல், தொலைபேசி, Whatsapp, Skype போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

பொதுமக்களுக்கான கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு, அவர்களுக்கு நேரடி சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய Online தளமொன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய – தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கோருவதற்கு நிறுவனத்தின் தலைவருக்கு அதிகாரம் இருப்பதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இலேசான அல்லது கொரோனா அறிகுறிகள் தென்படும் ஊழியருக்கு எவ்வித பணியும் வழங்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |