Home » » பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்! கல்வி அமைச்சிடம் கோரிக்கை

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்! கல்வி அமைச்சிடம் கோரிக்கை

 


பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளையில் இருந்து தரம் - 6 தொடக்கம் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள்.

இலங்கையில் இன்றுவரை கொரோனா மரணங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கையும் உயர்ந்தே செல்லுகின்றது. ஆடைத் தொழிற்சாலை கொத்தணியும், பேலியகொட கொத்தணியும் நாடு முழுவதும் தீவிரமாக பரவியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கும் போதே ஆடைத்தொழிற்சாலை நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அதன் காரணமாகவே பரீட்சையை இரு வாரங்களுக்காவது ஒத்திவைத்து தொற்றைக் கட்டுப்படுத்திய பின்னர் பரீட்சையை நடாத்துங்கள் எனக் கேட்டோம். ஆனால் பரீட்சை தொடர்ந்தது. தொற்றோடும் மாணவர்கள் பரீட்சை எழுதினர். அதனை இயல்பு நிலையெனக் கருதிய மக்கள் சாதாரணமாக நடந்து கொண்டனர்.

அதன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கும் காரணம்.

நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலைக் கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு, ஆரம்பப் பிரிவுகள் இணைந்துள்ள இடைநிலை மற்றும் மேல்நிலைப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டுமா?

வெவ்வேறு மாவட்டங்களில் கடமையாற்றும், வேறு மாகாணங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்? தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகள் இயங்கும் பிரதேசங்களுக்கு எவ்வாறு செல்வது? அவர்களின் கடமை ஒழுங்கு என்ன?

இது போன்ற விடயங்களுக்கு தெளிவான அறிவித்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |