Home » » வீட்டு கழிவுகளையும், கட்டிட பொருட்களையும் வீதியில் தேக்கி வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். - பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர்

வீட்டு கழிவுகளையும், கட்டிட பொருட்களையும் வீதியில் தேக்கி வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். - பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர்

 


நூருல் ஹுதா உமர்

பொறுப்பற்ற விதத்தில் சிலர் மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகள், கடற்கரை ஓரங்கள், நீர் நிலைகளில் குப்பைகளை விசுவதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அதை துப்பரவு செய்யும் மாநகர ஊழியர்களும் சங்கடத்திற்கு முகம் கொடுக்கின்றனர். பொதுமக்களையும் இந்த சமூகத்தையும் பற்றி சிந்திக்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என கல்முனை மாநகரசபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

இன்று (05) காலை கல்முனை மாநகரசபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து சமகால சுகாதார நிலைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர் கல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக கோவிட் 19 தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பில் சிறிய தடுமாற்றம் இருந்து வருவது கவலையளிக்கிறது.

கூட்டம் கூட்டமாக மக்கள் பொது இடங்களில் கூடி நிற்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான சுகாதார தரப்பினரும், கல்முனை மாநகர சபை முதல்வர் தலைமையிலான சுகாதார பிரிவினரும் முன்வைத்த ஆலோசனைகளை மக்கள் பூரணமாக கடைபிடிக்கவில்லை.

அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணுவதன் மூலமுமே கோவிட் 19 தொற்றை சமூக பரவலில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.  இதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கு பூரணமாக மனமுவர்ந்து வழங்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களை நூற்றுக்கும் குறைவான சில சுகாதார ஊழியர்கள், உத்தியோகத்தர்களினால் கண்காணிக்க முடியாது. அவர்களுக்கும் தமது சேவைக்கு மேலாக தனிப்பட்ட வாழ்க்கையும், குடும்பங்களும் இருக்கின்றது.

கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த எமது கல்முனை பிரதேசத்தில் சிறப்பாக சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுகாதார ஊழியர்கள், உத்தியோகத்தர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் கோவிட் 19 தொற்று தொடர்பில் சந்தேகிக்கும் பொதுமக்கள் ஒளிந்துகொண்டிருப்பது, இடைஞ்சல் கொடுப்பது உங்களின் குடும்பத்தவரையும், இந்த பிரதேசத்தையும் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளிவிடும் என்பதை புரிந்து கொள்வதுடன் தனிமைப்படுத்தியவர்களை சுகம் விசாரிக்க செல்வதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்கள் இந்த பிரதேசத்தின் நலன் சார்ந்த விடயங்களில் எப்போதும் கரிசனை கொண்டவராக இருப்பதுடன் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

அதனடிப்படையில் முதல்வரின் ஆலோசனையின் பேரில் 06 தின்மக்கழிவகற்றல் வாகனங்களை திருத்தியமைத்து வலயங்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ளோம். பழுதடைந்துள்ள ஏனைய வாகனங்களும் விரைவில் திருத்தி வலயங்களுக்கு அனுப்பப்படும்.

பொறுப்பற்ற விதத்தில் சிலர் மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகள், கடற்கரை ஓரங்கள், நீர் நிலைகளில் குப்பைகளை விசுவதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அதை துப்பரவு செய்யும் மாநகர ஊழியர்களும் சங்கடத்திற்கு முகம் கொடுக்கின்றனர். பொதுமக்களையும் இந்த சமூகத்தையும் பற்றி சிந்திக்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

பாதையோர வடிகாண்களில் வீட்டின் கழிவு நீர்களை விடுவதையும் பாதைகளில் கட்டிட பொருட்களை தேக்கி வைப்பதையும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். என்று பல தடவைகள் எடுத்து கூறியும் மக்கள் செவிமடுப்பதாக இல்லை. இனியும் மாநகர சபை அறிவிப்புகளை கேளாமல் சட்டத்தை மீறி செயற்படும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |