Home » » மட்டக்களப்பில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்கள் - மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்கள் - மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

 


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மொத்த கிழக்கு மாகாண கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


இன்று (2020.11.06) மட்டக்களப்பில் இடம்பெற்ற கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 கொரோனா நோயாளர்களும், அம்பாறையில் 07 கொரோனா நோயாளர்களும், திருகோணமலையில் 13 கொரோனா நோயாளர்களும், கல்முனையில் 20 கொரோனா நோயாளர்களுமாக மொத்தம் 87 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதில் இன்று இனங்காணப்பட்ட மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதி நோயாளி செங்கலடியில் வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்ததாகவும் இவருக்கு வாழைச்சேனை மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகவே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஏறாவூரில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர் எனவும் , கோறளைப்பற்று மத்தியில் இனங்காணப்பட்டவர் பேலியன்கோட மீன் சந்தைக்கு சென்றவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கல்முனையில் தொற்றுக்குள்ளான இருவரும் முதல் தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளரின் உறவினர்கள் என்றும், அம்பாறையின் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டவர் கொழும்பில் இருந்து வந்து சில நாட்களின் பின்னர் மீண்டும் கொழும்புக்கு போகும்போது அங்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் காணப்படும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஐந்து வைத்தியசாலைகளிலும் காத்தான்குடி வைத்தியசாலையில் 94 கொரோனா நோயாளர்களும், கரடியனாறு வைத்தியசாலையில் 71 கொரோனா நோயாளர்களும், ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் 06 கொரோனா நோயாளர்களும், பதியத்தலாவ பிரதேச வைத்தியசாலையில் 20 கொரோனா நோயாளர்களும், பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் 70 கொரோனா நோயாளர்களுமாக மொத்தமாக 261 கொரோனா தொற்றாளர்கள் கிழக்கு மாகாணத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை காலத்தில் கிழக்கு மாகாணத்தில் 624 கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 361 பேர் சிகிச்சை வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் காத்தான்குடியில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி கொழும்பில் இருந்து வந்து பல இடங்களுக்கு போய் வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் மக்கள் சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட சட்டதிட்டங்களை சரியான முறையில் கடைப்பிடித்து வெளியில் தேவையில்லாது நடமாடுவதை குறைத்து வீடுகளில் இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறருடனான உரையாடலின் போது முகக்கவசத்தை முறையாக அணியுமாறும் வெளி இடங்களுக்கு போய் வந்தவுடன் கை, கால்களை கழுவுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை உடனடியாக பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவித்து அவருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |