Advertisement

Responsive Advertisement

மாவீரர் நாளில் வீடுகள் முன் அஞ்சலி செலுத்த கோருவதென தமிழ் கட்சிகள் தீர்மானம்!

 


கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் ஓரிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்துவது இம்முறை சாத்தியமில்லாத நிலையில், வீட்டு வாசல்களில் தீபங்களை ஏற்றி மாவீரர்களை நினைவுகூர அழைப்பு விடுப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.


தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு சார்பில் மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் குணாளன், தனூபன், வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லம் சார்பில் வேந்தன் (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர்) உட்படப் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் .

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனாத் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி நீதிமன்றங்களின் ஊடாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடையை அரசு ஏற்படுத்தி வரும் நிலையில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என இதன்போது ஆராயப்பட்டது.

நவம்பர் 27ம் திகதி அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் தீப ஒளியை ஏற்றுமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது எனவும், மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக ஊடகங்கள் மூலமாகத் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது கருத்துக் கூறப்பட்டது.

Post a Comment

0 Comments