Home » » கொரோனா அச்சம் காரணமாக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானம்!!

கொரோனா அச்சம் காரணமாக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானம்!!

 


மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது


இதன்படி, அத்தியவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக, மாவட்டங்களை விட்டு வெளியேற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கொவிட் 19 தொற்றை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்களின் வாழ்வுக்கு பாதிப்பில்லாத வகையிலும், பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, இதன்போது ஜனாதிபதியினால் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், கடந்த காலத்தைப் போன்று ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அத்தியவசிய சேவையில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

இதன்படி, 84 நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பாது, வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை வெற்றிகரமான பெறுபேற்றைத் தந்துள்ளதாக இன்றைய கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நடவடிக்கைகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவம் உள்ளிட்ட தரப்பின் கண்காணிப்புக்கு தொடர்ந்தும் உட்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கான PCR பரிசோதனையை 10 ஆவது நாளில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அவ்வாறு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களுக்கு, கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், 14 நாட்களின் பின்னர், அவர்களை சாதாரண முறைக்கு விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர்ந்தும் முறையான பரிசோதனைகளை முன்னெடுப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பெறுபேறுகளை, குறுகிய காலத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியுமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை வீடுகளுக்கே சென்று வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய கலந்துரையாடலில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |