வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிகூடிய 200 புள்ளிகளை பெற்று 10 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கொவிட் 19 வைரஸ் நிலமையைக் கருத்திற் கொண்டு பல்வேறு தடவைகள் பரீட்சை பிற்போடப்பட்ட நிலையிலும் கடந்த ஒக்டோபர் மாதம் 11 ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றது.
இம்முறை பரீட்சைக்கு 3 இலட்சத்து 26 ஆயிரத்து 264 மாணவர்கள் தோற்றினர்.
பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இம்முறை அதிகூடிய 200 புள்ளிகளை 10 மாணவர்கள் பெற்றுள்ளனர். காலி சங்கமித்தா கல்லூரியின் ஷியத்தி பித்துன்சா, எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலயத்தின் தொவிந்து விரஞ்சித் ஆகியோர் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இங்கிரிய சுமணஜோதி கல்லூரியின் தெவ்லி எசஸ்மீ, இரத்தினபுரி எஹலியகொட ஆரம்பாடசாலையின் செனுதி தம்சரா, கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியின் பர்சான் மொஹமட் அமர் மற்றும் திவுலாகல ஸ்ரீபுர தெனுஜ மனுமித்த ஆகிய மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றவர்களில் அடங்குகின்றனர்.
பெறுபேறுகள் தயாரிப்பில் நாடளாவிய ரீதியிலேயோ அல்லது மாவட்ட ரீதியிலோ மாணவர்களின் நிலையை வெளியிடாமல் இருப்பது விசேட அம்சமாகும்.
இம்முறை 20 ஆயிரம் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அதில் 250 புலமைப் பரிசில்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மாணவரும் புள்ளிகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யவேண்டுமாயின், மேன்முறையீடு சமர்ப்பிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு சாஹிரா கல்லூரியின் 128 ஆண்டு கால வரலாற்றில் முதல் தடவையாக 5 ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளைப்பெற்று பர்சான் மொஹமட் அமர் எனும் மாணவன் சாதனை படைத்துள்ளான். குறித்தமாணவன் சிங்கள மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி இவ்வாறு சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் தமிழ் மொழி மூலம் 199 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்பபாடசாலை மாணவி அர்சாத் செய்னா முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
யாழ் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மாணவி இம்முறை 5 ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 2 ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments