2021 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்குமான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலம், இரண்டாவது வாசிப்புக்காக பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நளை (17) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
2021ஆம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர், ஒக்டோபர் 20ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) முன்வைக்கப்படவிருப்பதால் பாராளுமன்றம் நாளை (17) பிற்பகல் 1.40 மணிக்கு கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.
இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவினால் வரவு - செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும், இது இந்நாட்டின் 75வது வரவுசெலவுத்திட்ட அறிக்கையாக அமையும்.
2021ஆம் நிதி ஆண்டில் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு 2,678 பில்லியன் ரூபாவையும், இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ 2,900 பில்லியன் ரூபா வரையறைக்கு உட்பட்டதாகக் கடன்களைத் திரட்டுவதற்காகவும் ஒதுக்கீட்டுச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.
பிரதமரினால் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படும். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் முற்பகல் 9.30 மணி முதல் 5.30 மணிவரை நடத்தப்படும்.
இதன் பின்னர் வரவுசெலவுதிட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரை நடத்தப்படும். டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நாளையதினம் (17) முதல் வரவு செலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் முழுமையான காலப்பகுதியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
நாளையதினம் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுடன், வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படும் காலப்பகுதியில் சபாநாயகரின் கலரியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பொதுமக்கள் கலரி மற்றும் ஊடகவியலாளர் கலரி என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நிதி அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக ஏற்பாடு செய்யப்படும் தேநீர் விருந்துபசாரம் இவ்வருடம் இடம்பெறவிருக்கின்றபோதும், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்காக மாத்திரம் இது மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
கொவிட் 19 சவால் காரணமாக வரவுசெலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விருந்தினர்களைப் பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முடியாது.
0 comments: