Home » » கல்முனையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை!

கல்முனையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை!

 


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்துவதற்கும் இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட கல்முனையை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இன்று(24) சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, கல்முனை மாநகர சபையிலும் அதனைத் தொடர்ந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலும் இடம்பெற்ற அவசர கூட்டங்களின்போதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் திருமண வைபவங்கள், கூட்டங்கள், விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

பொது நூலகங்கள் பூட்டப்படுவதுடன் கடற்கரை, சிறுவர் பூங்காக்கள், மைதானங்கள், கடைத் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அவசியமான தேவைகள் நிமித்தம் மாத்திரம் வெளியில் செல்வோர் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும் சந்தை மற்றும் கடைகளுக்கு குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் செல்லுமாறும், தேவையின்றி எவரும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கை கழுவும் வசதி செய்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் மீதும் பொது இடங்கள் மற்றும் கடைத்தெருக்களில் ஒன்றுகூடுவோர் மீதும் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கல்முனை பொதுச் சந்தைக்கு செல்வோர் ரெஸ்ட் ஹவுஸ் பக்கமாக அமைந்துள்ள பிரதான வழியால் சென்று மைதான வீதி வழியால் வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் எனவும் வாகனத் தரிப்பிடமாக பிஸ்கால் வளாகம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் சேவையின்போது தரம்பிரிக்கப்பட்ட கழிவுகளை மாத்திரம் பொறுப்பேற்பது எனவும் மரக்குற்றிகள் மற்றும் பாரிய கழிவுப் பொருட்களை கையளிக்க வேண்டாம் எனவும் ஊழியர்கள் எவரும் வீடு, வளவுகளுக்குள் பிரவேசிக்காமல், நுழைவாயில்களில் நின்றே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகருக்கு வெளியில் இருந்து வருவோர் தொடர்பில் பிராந்திய சுகாதாரப் பணிமனை அவதானம் செலுத்தி, அவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அனைத்து இடங்களிலும் முழு நேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் இதற்கு மேலதிகமாக அவசர நடவடிக்கைகளுக்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |