Home » » கொரோனா தொடர்பான கேள்விக்கு சபையில் மௌனம் காத்த சுகாதார அமைச்சர்!

கொரோனா தொடர்பான கேள்விக்கு சபையில் மௌனம் காத்த சுகாதார அமைச்சர்!

 


இலங்கையில் கொரோனா பரவல் இன்னமும் சமூக பரவலாக மாற்றமடையவில்லை, ஆரம்பத்தில் இருந்தே நாம் ஆரோக்கியமான நிலைமையில் இருந்தோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் இரண்டாம் அலைக்கு காரணம் என்ன என்பதை சபையில் வெளிப்படுத்தாமல் மௌனம் காத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால் விசேட கூற்றொன்று எழுப்பப்பட்டு, நாட்டின் கொரோனா தொற்று நிலைமைகள் குறித்து அரசாங்கமும், சுகாதார அமைச்சரும் பொய்களை கூறி வருவதாக சபையில் சாடியிருந்தார்.

இதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதில் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளோம் எனவும், வைரஸ் சமூக பரவலாக மாறும் நிலைமையை கட்டுப்படுத்திய நாடு இலங்கை எனவும் நான் கூறியதாக லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார்.


ஆனால் நாம் கூறிய விடயங்களை இவர்கள் எவரும் முழுமையாக கேட்கவில்லை. கொவிட் வைரஸ் பரவலை சமூக பரவலாக்க விடாது தற்போது கட்டுப்படுத்தியுள்ளோம் என்றே நான் கூறினேன்.

வைரஸ் பரவல் நிலைமைகளை நான்கு கட்டங்களின் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதில் முதலாவது தொற்றாளர் இல்லாத கட்டம், இரண்டாம் கட்டமாக வெவ்வேறு இடங்களில் தனித்தனி நோயாளர்கள் அடையாளம் காணப்படல், மூன்றாம் கட்டமாக கொத்தணிகளாக அடையாளம் காணப்படல், இறுதி கட்டமானது நாடு பூராகவும் அளவுகணக்கு இல்லாது நோயாளர்கள் அடையாளம் காணப்படல்.

இந்த கட்டங்களின் அடிப்படையில் இலங்கை எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அவதானித்தால் நாம் ஆரோக்கியமான மட்டத்தில் இருந்தோம். பரிசோதனை செய்து பார்க்கப்பட்டவர்களில் அச்சுறுத்தலான நிலைமைகள் எதுவும் இருக்கவில்லை.

எனவே சில மாத காலங்களாக நாம் நோயாளர் இல்லாத நாடக செயற்பட்டோம். அதனை கருத்தில் கொண்டே நான் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்தேன்.

ஆனால் வேறு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை அழைக்குமாறு கோரிக்கை விடுத்ததற்கு அமைய அவர்களை வரவழைத்து அதன் மூலம் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் நாடு மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் நான் கூறினேன்.

எனவே எனது கதையை திரிபுபடுத்த வேண்டாம். இலங்கையில் அச்சுறுத்தல்கள் இருப்பதாக நான் கூறியுள்ளேன். வெளிநாடுகளில் உள்ள சகலரையும் எம்மால் இலங்கைக்குள் வரவழைக்க முடியாது, அது இலங்கையில் நிலைமையை மாற்றும் என தெளிவாக கூறியுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |