நுவரெலியா- நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம், அப்பகுதியிலுள்ள ஆற்றொற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா- எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற, டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
“மகள் நேற்றிரவு, 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எனவே நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும்போது மகளை காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை, தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே, வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாக கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments