13 ப்ளஸ் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களை கூறுவாரென நான் நினைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கான இளைஞர் என்ற தலைப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் வீட்டுத் திட்ட பிரச்சினை என்பன அனைத்து இலங்கை இளைஞர்களுக்கும் இருக்கும் பாரிய பிரச்சினை. 30 வருட கால யுத்தம் இருந்தமையினால் தெற்கைவிட 10 வீதம் அதிகளவான பிரச்சினைகள் வட, கிழக்கில் இருக்கின்றன.
அரசியல் ரீதியான நல்லிணக்க பிரச்சினைக்கு பொருளாதார ரீதியிலான தீர்வை கொடுப்பதாயின் நீண்ட காலத்திற்கு முன்னரே அந்த பிரச்சினைக்கான தீர்வை வழங்கியருக்க முடியும்.
அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவருடைய காலத்தில் பொருளாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் மலையத்திலுள்ளவர்கள் இன்றுவரை வாக்குரிமைக் கூட இல்லாதிருந்திருக்கும்.
ஆகவே, இந்த நாட்டிலுள்ள தமிழ் இளைஞர்களின் அதிகளவான பிரச்சினைகளுக்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குமான தீர்வை புதிய அரசியலமைப்பின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியுமென்பதால் இந்த நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்றேனநான் கூறுவேன்.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் முக்கியஸ்தர்கள் மரணித்துள்ள போதிலும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை நாங்களே எதிர்க் கொள்கின்றோம்.
19 ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அவசர அவசரமாக 20 ஐ கொண்டுவராது புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது பொருத்தமானதாகும்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 13 ப்ளஸ் என்பதன் ஊடாக இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியுமெனக் கூறியிருந்தார்.
ஆகவே, இளம் வயதுடையவர்கள் அதிக காலம் வாழ முடியுமென்பதால் எதிர்காலத்தை பற்றி சந்தித்து முடிவெடுத்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் பதில் கிடைக்கும்.
13 ப்ளஸ் என்பது நான் கூறியதல்ல. ஆது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களை கூறுவாரென நான் நினைக்கவில்லை.
13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல. நாட்டிலுள்ள அரசியலமைப்பிலுள்ள விடயங்கள் என்பதால் அதனை மேலும் பலப்படுத்துமாறே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.
0 comments: