Home » » மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்கு கண்டனம்

மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்கு கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவி பிரதேச செயலாளரின் நற்பெருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இணையத்தளம் ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டதனை பிரதேசத்தின் சமூக நலன் சார்ந்த அமைப்பு என்றவகையில் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். என படுவான் பிரதேச சமூக நலன் அமைப்பு இன்று (18.07.2020) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை (15.07.2020) இணையத்தளம் ஒன்று வெளியிட்ட செய்தியிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் படுவான் பிரதேச சமூக நலன் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

எமது படுவான்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள மண்முனை மேற்கு பிரதேசத்தில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவையிலுள்ள உதவி பிரதேச செயலாளர் திருமதி சதாகரன் சுபா என்பவர் நாம் அறிந்தவரை பிரதேசத்தின் மேம்பாட்டுக்காகவும், மக்கள் நலன் சார்ந்த விடயங்களை மிக சிறந்தமுறையில் துடிப்புடன் மேற்கொள்ளும் நேர்மை மிக்க ஓர் அதிகாரியாவார்.

உதவி பிரதேச செயலாளர் தனது காரியாலய ஊழியர்களை ஒரு கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு அமர்த்தியுள்ளதாகவும், தபால்மூல வாக்களிப்பு நடைபெற்றபோது இவ் ஊழியர்கள் பிரதேச செயலகத்தில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டது உள்ளிட்ட சில விடயங்களை இவர்கள்மீது குறித்த இணையத்தளம் எழுதியுள்ளது.

நாம் எமது அமைப்பின் இரு உறுப்பினர்கள் ஊடாக இவ் விடயம் பற்றி வௌ்ளிக்கிழமை 17.07.2020ம் திகதி குறித்த கிராமங்களுக்கும், பிரதேச செயலகத்திற்கும் சென்று ஆராய்ந்தவேளையில் இவ்வாறான எந்த சம்பவமும் நடைபெறவில்லை என அறியமுடிந்தது.

இச் சம்பவம் உதவி பிரதேச செயலாளரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளது. இவர் எந்த கட்சி சார்பாகவும் இங்கு கடமையாற்றும் காலங்களில் செயற்படுபவரல்ல.

இவ்வாறு சிறந்த துடிப்பான ஓர் நிருவாக சேவை அதிகாரியை எமது பிரதேசம் இழந்துவிடக்கூடாது, எமது பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவரால் கிடைக்கவேண்டிய சேவைகள் நிறையவே உள்ளது எனும் நோக்கில் எமது அமைப்பு உள்ளது.

இவ்வாறாக சம்பவங்களால் எதிர்காலத்தில் பாதிக்கப்படப்போவது எமது பிரதேச மக்கள்தான் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆகையால் ஒரு சிறந்த நிருவாக சேவை அதிகாரியை அவரது நற் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் திட்டமிட்டு, பொய்யான விடயங்களை சோடனை செய்து செய்தி வௌியிட்டதை நாம் மிக வன்மையாக கண்டிப்பதுடன் அவ் இணையத்தளம் குறித்த செய்தியை வௌியிட்டதற்கு மறுப்பறிக்கை இடவேண்டும் என்பதனையும் இத்தால் வௌிப்படுத்துகின்றோம்.

என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |