Advertisement

Responsive Advertisement

சந்தைக்கு செல்வதை விட வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வது பாதுகாப்பானது - மஹிந்த தேசப்பிரிய

சந்தைக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வதை விட வாக்களிக்க செல்வது பாதுகாப்பனது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

“எவரேனும் வாக்களிப்பு தினத்தில் கடமைக்கு வருகை தருவதில் இருந்து தவிர்ந்துக்கொள்ள வேண்டாம். அச்சமின்றி வாருங்கள். நாளாந்தம் அலுவலகங்களுக்கு வந்து செல்வதை விட வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்புமிக்கவை. சந்தைக்குச் சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக நாணய தாள்களை எண்ணுவதை விட எமது வாக்குசீட்டுக்களை கணக்கிடுவது பாதுகாப்பானது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வருவார்கள் என யாரேனும் நினைக்க வேண்டாம். அவர்களுக்கு இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு நிலையங்களில் வாக்குச்சீட்டுக்களின் மூலம் இத்தொற்று நிச்சயம் பரவாது. புகையிரதத்தில் நான்கு மணிநேரம் ஒரே அமர்வில் இருந்து கொண்டு அலுவலகங்களுக்கு வருகை தருகின்றனர். வாக்கெண்ணும் நிலையங்களில் ஒரு மீட்டர் சமூக இடைவெளி நிச்சயம் பேணப்படும்.”

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொது சுகாதார பரிசோதகர்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் மஹிந்த தேஷபிரிய மேலும் தெரிவித்தார்.

“ஒருசிலர் இன்றி தேர்தலை நடத்த முடியும். உதாரணமாக கூறினால் நான் இராஜினாமா செய்தாலோ அல்லது இறந்தாலோ இத்தேர்தல் நடத்தப்படும். பொது சுகாதார பரிசோதகர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடனும் மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இவர்கள் அனைவரும் சங்கிலி தொடராகவே காணப்படுகின்றனர். இச்சங்கிலி தொடரில் இருந்து எவருக்கும் விலகிச்செல்ல இடமளிக்கப்பட மாட்டாது. ஏன் என்றால் தேர்தலுக்கு மாத்திரமன்றி, எமது நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கொரோனா தொற்றில் இருந்து சுகாதார சேவையின் அர்ப்பணிப்பு காரணமாகவே விடுப்பட்டுள்ளோம். இவர்கள் அனைவரினதும் பூரண பங்களிப்பு கிடைத்து வருகின்றது. நாம் இன்றி எதுவும் நடக்காது என்ற நிலைப்பாடு கிடையாது.”

இதேவேளை பொது தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பதற்கு எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகள் விசேட தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 24ம் திகதி காலை 8 மணிமுதல் பி.ப 4 மணிவரையும் 25ம் திகதி காலை 8.30 முதல் பி.ப 2 மணிவரையும் தபால்மூலம் வாக்களிக்க முடியும். இதுவரை தபால்மூல வாக்களிக்க தவறியவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இவ்வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments