Home » » இடர் நிலையை கவனத்தில் கொள்ளாது, சுற்றுநிருபத்தை மீறும் கல்வி அதிகாரிகள்: பிரஜைகளின் வாழும் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது! - ஜோசப் ஸ்ராலின் -

இடர் நிலையை கவனத்தில் கொள்ளாது, சுற்றுநிருபத்தை மீறும் கல்வி அதிகாரிகள்: பிரஜைகளின் வாழும் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது! - ஜோசப் ஸ்ராலின் -

கொரோனா ஆபத்துக்களை தவிர்த்து பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக -  கல்வியமைச்சின் ED/01/12/06/05/01 இலக்க சுற்றுநிருபம் -ஆசிரியர்களின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் - தடையற்ற கல்வியையும் உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இச் சுற்று நிருபத்தில், ஒவ்வொரு ஆசிரியரும் தனது முதல் பாடவேளை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளித்தால் போதுமானது எனவும் - பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்படவேண்டும். எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் - கல்விசார் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை தொடர்பாக பொது 18 ஆவணம் அல்லாமல், அதன் மாதிரியான தனியான ஆவணமொன்றையே பேணுமாறும் சுற்றுநிருபம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை - எதிர்வரும் நாட்களில் பகுதிபகுதியாகவே வகுப்புப் பிரிவுகள் ஆரம்பமாக உள்ளன. பாடவேளைகள் இல்லாத ஆசிரியர்களையும் காலை 7.30 மணி முதல் பாடசாலை நிறைவடையும் வரை மறித்து வைப்பதும் - சுற்றுநிருபத்தில் கூறப்படாததும் சுகாதார பரிசோதகர்களால் பரிந்துரைக்கப்படாததுமான விரலடையாள இயந்திர பதிவு முறைகளை திணிக்க முயற்சிப்பதும், ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத அதிகாரிகளின் வன்மம் கொண்ட செயற்பாடாகும்.

ஆசிரியர்களினதும் சமூகத்தினதும் பாதுகாப்பு தொடர்பில் கிஞ்சித்தும் சிந்திக்காத கல்வி நிர்வாக அதிகாரிகள், கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு மாறாக, வக்கிர எண்ணத்துடன் செயற்பட முயல்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கொவிட் -19 நோயின் தாக்கமானது சிறுவர்களை விட பெரியவர்களையே அதிகளவில் பாதித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூர இடங்கள் பயணம் செய்து பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மற்றும் பாடசாலைகளில் ஆட்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றினூடாக -  அவசியமான  சந்தர்பங்களில் மட்டும் செயற்பட்டு -  சமூக இடைவெளியைப் பேணி – மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கொவிட் -19 நோயின் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தமுடியும்.

கொவிட் -19 தாக்கத்திலிருந்து முற்றாக விடுபடுவதற்கான செயற்பாடுகள் நாடுதளுவிய ரீதியாக முன்னெடுத்துவரும் நிலையில் - சமூக இடைவெளியை இயலுமான வரையில் பேணும் முகமாகவே அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வியமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபமும் இவற்றைக் கவனெடுத்திலெடுத்தே வெளியிடப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

பல நாடுகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே நோயின் தாக்கமும் அதிகரித்திருந்தது. ஆயினும் இங்குள்ள கல்வி நிர்வாகிகள் - மத்திய கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்குக் கட்டுப்படாமலும், ஆசிரியர்களின் பாதுகாப்பில் அக்கறைகொள்ளாமலும், இந்த இடர்கால நிலையை கருத்திலெடுக்காமலும் செயற்படுவதானது, மிக ஆபத்தான கட்டத்துக்கு இந்த நாட்டைக் கொண்டுசெல்லும்.

சுற்றுநிருபங்கள் கூறும் அறிவுறுத்தல்களைத் தவிர்த்து - தான்தோன்றித்தனமாக - ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பாதுகாப்பில் கவனம் செலுத்தாத கல்வி அதிகாரிகளின் கீழ்தர மன நிலையால் - முழு நாடும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலையே ஏற்படவுள்ளது. இவ்விடயத்தில் சுகாதார அமைச்சும் உடன் தலையிடவேண்டும்.

இடர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் செயற்படும் கல்வி நிர்வாகிகளின் சமூகப் பொறுப்பற்ற அணுகுமுறையால் - பிரசைகளின் உயிர்வாழும் உரிமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |