Home » » அம்பாறை மாவட்டத்திற்கான சுற்றுலாத்துறையில் திறன் அபிவிருத்திக்கான மூலோபாய திட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

அம்பாறை மாவட்டத்திற்கான சுற்றுலாத்துறையில் திறன் அபிவிருத்திக்கான மூலோபாய திட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

இலங்கையில் சுற்றுலாத்துறையில் திறன்களை அபிவிருத்தி செய்யும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் நிதியுதவியுடனும்  இலங்கை திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சசுடன் இணைந்து  முன்னெடுக்கப்பட்டுவரும் Skills for Inclusive Growth(S4IG)  திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவான உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான தேர்ச்சி திட்டத்தின் அம்பாரை மாவட்டத்துக்கான எதிர்வரும் 3 வருடங்களுக்கான மூலோபாயத்திட்டத்தின் (Tourism Skills Strategy and Action Plan for Ampara) வெளியீட்டு நிகழ்வு கடந்த 23.07.2020 வியாழக்கிழமை அம்பாரை ரண்பிம விடுதியில் நடைபெற்றது.


உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி (Skills for Inclusive Growth) நிகழ்ச்சித்திட்டத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் அபிவிருத்திக்கான செயற்திட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கை அரசாங்கம், இலங்கை திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் மாவட்ட செயலகங்கள், அரச நிறுவனங்கள் இணைந்து 2023ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்படவுள்ள செயல் திட்டங்களை உள்ளடக்கியதான அம்பாறை மாவட்டத்திற்கான மூலோபாய திட்டம்  (Tourism Skills Strategy and Action Plan) தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் வெளியீட்டு நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவும், சிறப்பு அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன், மாவட்டத்திட்டமிடல் செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அரச மற்றும் தனியார் சுற்றுலாத்துறை பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வில், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அம்பாரை மாவட்ட முகாமையாளர் யு.எல்.சம்சுதீன், S4IG  திட்டத்தின் மாவட்டங்களுக்கான சிரேஸ்ட முகாமையாளர் சின்னத்தம்பி ரகுராமமூர்த்தி, S4IG திட்டத்தின் மூலோபாயப் பிரிவு முகாமையாளர் சரண்யா ரவிக்குமார் உள்ளிட்டோருடன் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் ஜூடி தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தில், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான திறன்களை விருத்தி செய்வதன் மூலம், புதிய திறன்களை உருவாக்குதல், புதிய திறன்கள் உள்ள மனித வளத்தை உருவாக்குதல், தொழில்வாய்ப்புக்களை உருவாக்குதல், சுற்றுலாத்துறைக்குத் தேவையான புதிய திறன்களை விருத்திப் பயிற்சிநெறிகளை உருவாக்குதல், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சுற்றுலாத்துறையில் இணைப்பதற்கு ஊக்குவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி நெறிகளை வழங்குதல், கொவிட் 19க்கு முகம் கொடுக்கக்கூடிய வியாபாரத்தினை விருத்தி செய்வதற்கான திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலாத்தளங்கள் பற்றிய விபரங்களை வெளி இடங்களுக்குத் தெரியப்படுத்துதல், அது பற்றிய தகவல்களை உருவாக்குவதற்கான திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலாத்துறைக்குத் தேவையான திறன்களை இனங்கண்டு விருத்தி செய்து அவற்றை மாவட்ட மட்ட திட்டமிடல் செயற்பாடுகளுடன் ஒருங்கிணைத்தல், அரச மற்றும் தனியார் சுற்றுலாத்துறை பங்குதாரர்களை ஒருங்கிணைக்கத் தேவையான திறன்களை விருத்தி செய்தல் ஆகியவை மூலம் புதிய மாதிரிகளை உருவாக்கி தேசிய ரீதியாக அமுல்படுத்துவதற்கு அமைச்சுக்கு பரிந்துரை செய்தல் நடைபெறும்.

உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்நறுவை மாவட்டங்களைச் சேர்ந்த வறிய நிலையிலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் வலது குறைந்தோரை தொழிலாளர்களாக, உற்பத்தியாளர்களாக, மற்றும் முயற்சியாண்மையாளர்களாக சுற்றுலாத்துறையில் உள்வாங்குவததை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |