நூருல் ஹுதா உமர்.
அரசை எதிர்த்து நின்று எதிரணியில் இருந்து கொண்டு எமது தலைவர்களால் ஆசனங்களை மட்டுமே சூடாக்க முடியுமே தவிர எமது சமூகத்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. அப்படி எதிரணியில் அமர்ந்து சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்றால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல சாதனைகளை செய்திருக்கும். எமது நாட்டில் அப்படி ஒரு அதிசயம் நடக்க வாய்ப்பே இல்லை என கல்முனை தேர்தல் தொகுதியின் சார்பில் தேசிய காங்கிரசின் திகாமடுல்ல வேட்பாளராக களமிறங்கியுள்ள றிசாத் செரீப் தெரிவித்தார்.
நேற்று (30) இரவு கல்முனை பிரதேசத்தில் நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய அவர் தனது உரையில் மேலும்,
எமது தலைவர்களாக நாங்கள் அடையாளப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நடந்து கொண்ட விதம் சிங்கள மக்கள் எம்மை பிழையானவர்களாகவே கடந்த காலங்களில் எண்ண காரணமாக அமைந்துள்ளார்கள். தேர்தல் காலங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பதும் பின்னர் அவ்வரசாங்கத்தின் சலுகைகளை பெறுவதும் இவர்களின் வாடிக்கையாக மாறியுள்ளது. இனியும் அந்த கதை மஹிந்த அரசிடமோ மொட்டு ஆதரவு அணியிடமோ நடக்காது.
சிறுபான்மை அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி பலமானதாக இருந்த போது இருந்த அரசியல் நிலைக்கும் இப்போது நாட்டில் இருக்கும் பிளவுபட்ட அரசியல் நிலைக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. எமது அரசியல் தலைவர்களினால் எமது சமூகம் அடைந்த நன்மைகளை விட பாதிப்புக்களே அதிகம். இவைகளால் எதிரே வரும் அரசில் அரசின் பங்காளியாக மாற முடியாது. மொட்டு கூட்டமைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை ஏற்படும் போதும் இவர்களின் உதவி தேவைப்படாது. அதனை வழங்க இன்னும் பல அணியினர் தயாராக இருக்கிறார்கள் என்பது நாமறிந்த உண்மை.
இவர்கள் கடந்த காலங்களில் ஆளும் அணியில் பலமாக இருந்தே ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது எதிரணியில் இருந்து கொண்டு ஆசனங்களை மட்டுமே சூடாக்க முடியுமே தவிர எமது சமூகத்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. அப்படி எதிரணியில் அமர்ந்து சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்றால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல சாதனைகளை செய்திருக்கும். எமது நாட்டில் அப்படி ஒரு அதிசயம் நடக்க வாய்ப்பே இல்லை. இவர்களின் பிழையான வழிநடத்தல்களில் நாங்கள் இனியும் பயணிக்க முடியாது எனும் செய்தியை இவர்களுக்கு சொல்லும் காலம் வந்திருக்கிறது.
ஒரு உதாரணத்தை கூற வேண்டும் என்றால் முஸ்லிங்களின் முகவெற்றிலையாக இருக்கும் கல்முனையின் நிலை இன்று பரிதாபமாக மாற காரணம் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் மக்களாகிய நாங்கள் எடுத்த பிழையான தீர்மானங்களே. மறைந்த எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் முகத்தை பார்த்தும், பாடல் வரிகளுக்கு ஏமாந்தும் நமது தலையெழுத்தை நாமே பழுதாக்கிக்கொண்டோம் என்பதை இனியாவது உணர வேண்டும் அத்துடன்
இந்த சமூக துரோகிகளை சமூகத்திலிருந்து ஓரமாக்கி எல்லா இன மக்களுடனும் ஒற்றுமையுடனும், நட்புடனும் ஒன்றித்து வாழும் கலாச்சாரத்தை உருவாக்க இந்த நாட்டை நேசிக்கும் முஸ்லிங்கள் நாங்கள் எல்லோரும் இம்முறை தேசிய காங்கிரசை ஆதரிக்க முன்வரவேண்டும். இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் மனதில் சிறந்த சிறுபான்மை தலைவராக இருக்கும் எமது தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களை ஆதரித்து சிறந்த தலைமைத்துவமாக அடையாளப்படுத்த கல்முனை மக்களாகிய நாம் ஒன்றியவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
0 comments: