Home » » கல்முனை_ஆதார_வைத்தியசாலைக்கு_பல_கோடி_ரூபாவில்_CT_Scan_கருவி

கல்முனை_ஆதார_வைத்தியசாலைக்கு_பல_கோடி_ரூபாவில்_CT_Scan_கருவி

கல்முனை_ஆதார_வைத்தியசாலைக்கு_பல_கோடி_ரூபாவில்_CT_Scan_கருவி!
"பாரிசவாதம் அறிகுறிகள் தென்பட்டதும் நோயாளியை மூன்று மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தால் அதனைக் பூரணமாகக் குணமாக்க முடியும்.!
Source: தினகரன்

பெரும் பணம் செலவிட்டு கொழும்புக்கு அலையும் சிரமம் இனிமேல் இல்லை.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச வரலாற்றில் முதன்முறையாக சி.ரி.ஸ்கான் (CT Scan)செய்யும் வசதியும், பாரிசவாதத்திற்கான (Stroke)உடனடிச் சிகிச்சை பெறும் வசதியும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மக்கள் இச்சேவைகளுக்காக இலட்சக்கணக்கில் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து கொழும்பு, கண்டி என அலைய வேண்டியிருந்தது.காலதாமதத்தால் நோயாளர்கள் உயிரையும் இழக்க வேண்டிநேரிட்டது.

இது தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா.முரளீஸ்வரன் கூறியதாவது:

"கிழக்கு வாழ் மக்களுக்கு இதுவோர் அரிய வரப்பிரசாதமாகும். மேற்படி சேவையை நாடுவோர் எமது வைத்தியசாலைக்கு 24மணிநேரமும் வருகை தரலாம்.பல வருட காலமாக இப்பிரதேச மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த சி.ரி.ஸ்கான் வசதி தற்போது எமது வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை ஏற்படுத்துவதில் எமது கதிரிவியக்கவியல் வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.டிலக்குமாரின் அர்ப்பணிப்பான பங்களிப்பு மிக முக்கியமானது.இதேவேளை பலதரப்பட்ட அன்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இதனைப் பெறுவதில் உதவியுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி என்வகையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் வைத்திய கலாநிதி என்.இதயகுமார் ஏற்பாட்டில், பக்கவாதம் நோயை குணப்படுத்தும் சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பக்கவாதம் ஏற்பட்டதும் உடனடியாக நோயாளியை கொண்டு வந்த​லேயே சிகிச்சை வெற்றியளிக்க வாய்ப்புண்டு. இச்சிகிச்சை வசதி மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை பிராந்தியங்களில் முதற் தடவையாக எமது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பக்கவாத அறிகுறி தென்பட்டதும் உடனடியாக இங்கு வந்து சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேவேளை சி.ரி.ஸ்கான் வசதிக்கு அப்பால் உயர்தரத்திலான அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலமாக ஈரல் தொடர்பிலான நோய்களையும் புற்றுநோய்க் கட்டிகளையும் இனங்காண முடியும்.இவ்வசதிகளை பொதுமக்கள் உரிய வேளையில் வந்து பெற்றுக் கொள்ளலாம்."

கதிரியக்கவியல் பிரிவு வைத்திய நிபுணர் டொக்டர் சுந்தரலிங்கம் டிலக்குமாரிடம் இப்புதியசேவை தொடர்பாகக் கேட்டபோது பின்வருமாறு தெரிவித்தார்.

"கடந்த 10 வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சியின் பலனாக தற்போது எமது வைத்தியசாலையில் சி.ரி.ஸ்கான் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சேவையை பொதுமக்கள் 24மணிநேரமும் பெற்றுக் கொள்ளலாம்.பல கோடி ருபா பெறுமதியான இவ்வியந்திரத்தை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. எனவே அதனை மக்கள் பூரணமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தனியாரிடம் இவ்வசதியைப் பெறுவதாயிருந்தால் கொழும்பு சென்று 12ஆயிரம் ரூபா முதல் 50ஆயிரம் ரூபா வரை செலவழிக்க வேண்டும்.இன்னொரு நல்ல செய்தி. அதாவது இரத்தக் குழாய் அடைப்பை பரிசோதிக்கும் அன்ஜியோகிறாம் சோதனை எமது வைத்தியசாலையில் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும். அருகிலுள்ள வைத்தியசாலைகளும் இவ்வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். அறிகுறி தென்பட்டு 3மணி நேரத்துள் வந்தால் பாரிசவாதத்தை குணப்படுத்தலாம்."-

பொது வைத்திய நிபுணர் டொக்டர் நாராயணசுவாமி இதயகுமாரிடம் புதிய பக்கவாத சிகிச்சை தொடர்பாகக் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:

"பாரிசவாதம் அறிகுறிகள் தென்பட்டதும் நோயாளியை மூன்று மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தால் அதனைக் பூரணமாகக் குணமாக்க முடியும். எமது வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கான் வசதி கிடைக்கப் பெற்றதால் நாம் பாரிசவாத உடனடிச் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்திருக்கிறது.

ஒருவருக்கு முகம் கோணலாகிறது அல்லது கை இயலாமல் போகிறது அல்லது வாய் பேச முடியாமல் ஒரு பக்கத்திற்கு இழுக்கிறது அல்லது கால் இயலாமல் போகிறது என்றால் மறுகணம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தால் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அந்தநேரத்துள் சி.ரி.ஸ்கான் செய்து உரிய மருந்தை வழங்கினால் நிச்சயம் குணப்படுத்தலாம்.

அந்த 3 மணி நேர நேரத்தை வீட்டிலோ அல்லது தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது பயணத்திலோ தாமதிக்க வைப்பதால் குணப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

நாம் மாரடைப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாரிசவாதத்திறற்குக் கொடுப்பதில்லை. இரண்டும் ஒப்பீட்டளவில் ஒன்றுதான். மாரடைப்பு என்பது இதயத்திற்கு குருதி கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவது. பாரிசவாதம் என்பது மூளைக்கு குருதி கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவது.

பொதுவாக மூளைக்கு குருதி கொண்டு செல்லும் இரு வகையான காரணிகளால் பக்கவாதம் ஏற்படுகிறது.சுமார் 80-_85 வீதமான பக்கவாதம் குருதிக்குழாயில் ஏற்படுகின்ற அடைப்பினால் வருவது. மீதி 10-_15வீதமான பக்கவாதம் குருதிக்கசிவினால் ஏற்படுகின்றது. கசிவினால் ஏற்படும் வாதத்தை நரம்பியல் நிபுணரின் துணையோடு குணப்படுத்தலாம்.

பக்கவாதம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உயர்குருதி அமுக்கம், நீரிழிவு, கொலஸ்ரோல், புகை பிடித்தல், மதுஅருந்துதல் என்பன கட்டுப்பாட்டில் இல்லாததே பிரதான காரணம்.

பக்கவாதம் வருவதிலிருந்து பாதுகாக்க வேண்டுமாகவிருந்தால் தினமும் 30 நிமிடம் வேகநடையுடன் கூடிய உடற்பயிற்சி அவசியம். வீட்டில் வேலை செய்தல், சமநிலை உணவுப்பழக்கவழக்கத்தை சீராக மேற்கொள்ளல், தேவையற்ற மனஅழுத்தத்தை தவிர்த்தல் அவசியம். தியானம் செய்தல் நல்லது.

நன்றி: தினகரன்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |