Advertisement

Responsive Advertisement

மன்னார் மாவட்டத்தில் கோழி இறைச்சி விற்பனை தற்காலிகமாக இடை நிறுத்தம்



கோழி இறைச்சிக்கான அதிகூடிய கட்டுப்பாட்டு விற்பனை விலையை அதிகரிக்க கோரி மன்னார் மாவட்ட கோழி விற்பனை உரிமையாளர்கள் கோழி இறைச்சி விற்பனையை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.
தோலுடனான கோழி ஒரு கிலோகிராம் 430 ரூபா எனவும், உரித்த கோழி 500 ரூபாய் எனவும் வர்த்தமானி அறிவுறுத்தல் ஊடாக அரசாங்கம் விலை நிர்ணயித்திருந்த நிலையில் குறித்த விலைக்கு விற்பனை செய்தால் தாங்கள் அதிகளவு நட்டத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் எனவும், நிர்ணய விலையை அதிகரித்து நிர்ணயிக்குமாறும் கோரி மன்னார் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் வியாபார நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கோழிகளின் விற்பனை விலைகளை அதிகரித்தமையினால் கோழி விலை மற்றும் போக்குவரத்து செலவீனம், கோழி தீவனம் உட்பட அனைத்தையும் உள்ளடக்கியே தற்காலிகமாக தாங்கள் விலைகளை அதிகரித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மொத்த விற்பனையில் ஈடுபடும் பண்ணைகள் விலைகளை குறைத்தால் மாத்திரமே சில்லறை வியாபரிகளாகிய நாங்கள் கோழியின் விலையை குறைத்து விற்பனை செய்ய முடியும் எனவும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து சிறிய அளவிலாவது இலாபம் அடையக் கூடிய விலையையாவது அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என கோழி விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் புதிய விலைக்கு விற்பனை செய்யாத வியாபாரிகளுக்கு எதிராக மன்னார் நுகர்வோர் அதிகாரபை அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments