Home » » கதிர்காமக் கொடியேற்றமும் கன்னிக்கால் நடும் வைபவமும் !!!

கதிர்காமக் கொடியேற்றமும் கன்னிக்கால் நடும் வைபவமும் !!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் நடும் வைபவம் நேற்று முன்தினம்(6) சனிக்கிழமை காலை ஆலயத்தில் நடைபெற்றது.

அதன்படி ஆடிவேல்விழாவிற்கான கொடியேற்றம் ஜூலை மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. தீமிதிப்பு வைபவம் ஜூலை 31இல் வெள்ளியன்று நடைபெறும்.
அதேவேளை ஆடிவேல்விழா உற்சவத்தின் இறுதி மகாபெரஹரா ஊர்வலம் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற வருடாந்த தீர்த்தோற்சவம் மறுநாள் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும்.

கன்னிக்கால் நடப்பட்டு 45 தினங்களின் பின்னர் கொடியேற்றம் நடைபெறுவதும் அது போல கொடியேற்றம் நடைபெற்று 15 தினங்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவதும் பாரம்பரிய வழக்கமான நடைமுறைகளாகும்.

எனினும் சமகால கொரோனாச் சூழலில் ஆலய ஆடிவேல்விழா உற்சவம் எவ்வாறான நடைமுறைகளில் நடாத்தப்படுமென்பது தொடர்பான இறுதி முடிவு மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெறவிருக்கும் பிரதான கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

இதேவேளை இம்முறை கொரோனா சுகாதார நடைமுறைக்குச் சாதகமாக பாதயாத்திரைக்கு அனுமதியளிப்பதில்லை என கன்னிக்கால் நடும் வைபவத்தில் வைத்து குறித்த தரப்பினர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த தீர்மானம் மொனராகலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் திணைக்களத் தலைமைகளுடன் நடாத்தப்படும் பிரதான கூட்டத்தில் தீர்மானிக்கப்படுவது வழக்கம். அங்குதான் காட்டுப்பாதை திறக்கப்படுவது குறித்தும் அறிவிக்கப்படுவது வழக்கம்.

எனினும் கதிர்காமத்திற்கான பாரம்பரிய பாதயாத்திரை நடாத்தப்படுவது தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவேதும் எடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |