இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலியின் அண்ணனும், பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளருமான சினேகாசிஷ் கங்குலியின் மனைவி, மாமனார், மாமியார் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கொல்கத்தாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் பங்காளதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஸ்ரபீ மோர்தசா கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போதே அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மோர்தசா டாக்காவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மோர்தசாவின் மாமியார் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இதேவேளை கடந்த ஆண்டு நடந்த உலக கிண்ண போட்டியில் பங்காளதேச அணியை வழிநடத்திய 36 வயதான மோர்தசா 36 டெஸ்ட், 220 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் சயீட் அப்ரிடிக்கு அடுத்தபடியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர் மோர்தசா ஆவார்.
இந்த நிலையில் தனக்காக பிரார்தனை செய்யுமாறும், வீட்டிலேயே பாதுகாப்புடன் இருக்குமாறும் மோர்தசா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பங்காளதேஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவர் தமிம் இக்பாலின் அண்ணனும், முன்னாள் வீரருமான நபீஸ் இக்பால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சிட்டகொங்கில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
34 வயதான நபீஸ் இக்பால் பங்காளதேஸ் அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.
இதேவேளை, கடந்த 2 வருடங்களாக பங்காளதேஸ் அணிக்காக விளையாடி வரும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் 28 வயதான நஸ்முல் இஸ்லாமும் கொரோனாதொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.
0 Comments