Home » » கல்முனையில் குதிரைக் கட்சி, மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மோதல்; நால்வர் விளக்கமறியல்

கல்முனையில் குதிரைக் கட்சி, மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மோதல்; நால்வர் விளக்கமறியல்

(பாறுக் ஷிஹான்)
இரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றுஉத்தரவிட்டது.

கடந்த இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் மற்றும் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களுக்கே இவ்விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பவ தினமன்று தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக அப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து கல்முனை மாநகர சபை சுயேட்சைக்குழு உறுப்பினர் தனது பகுதியில் பிரசாரம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த பிரசார நடவடிக்கை முடிவுற்ற பின்னர் குறித்த சுயேட்சை உறுப்பினர் தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் மீது இனந்தெரியாத சிலர் கத்தி வெட்டு தாக்குதல் ஒன்றினை இரவு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து கத்திவெட்டு தாக்குதலில் காயமடைந்தவரின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் என அடையாளப்படுத்தி சிலரை இனங்காண முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் திடிரென மற்றுமொரு தாக்குதல் இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்டு பின்னர் அதில் காயமடைந்ததாக சிலர் திடிரென கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற மற்றுமொருவரை மற்றுமொரு குழு வைத்தியசாலையில் உள்நுழைந்து சிகிச்சைக்காக காயமடைந்தவர்களை அனுமதித்த நபரை தாதிகள், வைத்தியர்கள் ,பாதுகாப்பு ஊழியர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேளை வெளியில் இழுத்து சென்று தாக்குதல் முயற்சி ஒன்றினை மேற்கொண்டு தப்பி சென்றனர்.

இத்தாக்குதல் சம்பவத்தினை வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா பதிவு செய்திருந்ததுடன் சமூக ஊடகங்களிலும் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவம் நடந்த மறுநாள் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு நால்வரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், சந்தேக நபர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு இருந்த போதிலும் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீமை அச்சுறுத்தும்முகமாக இனந்தெரியாத நபர்கள் அவரது வீட்டினுள் சென்று அராஜகம் செய்ததாக சிசிடிவி காணொளி கல்முனை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |