Home » » மட்டக்களப்பில் வழிபாட்டுத் தலங்கள், பிரத்தியேக வகுப்புக்கள் செயல்பட அனுமதி

மட்டக்களப்பில் வழிபாட்டுத் தலங்கள், பிரத்தியேக வகுப்புக்கள் செயல்பட அனுமதி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல மத ஸ்தலங்களிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும் 12ஆந் திகதிமுதல் சமய வழிபாடுகளில் ஈடுபட மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்குழு அனுமதித்துள்ளது.

செயலணியின் விசேட கூட்டம் புதன்கிழமை 10.06.2020 மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது இத்தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச ஊடப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

இச்செயலணிக் கூட்டத்தில் பிரத்தியேக வகுப்புகளை அதிகபட்சம் 100 மாணவர்களைக் கொண்டு நடாத்த அனுமதி வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுப்போக்குவரத்தின்போது ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிப்பதில்லை எனவும், அவற்றைப் பொலிஸார் பரிசோதனை செய்வதெனவும், உள்ளுராட்சி மண்றங்களின் தீர்மானங்களுக்கமைய கொரோனா தடுப்பு சுகாதாரச் சட்டங்களை மீறாதவாறு பொதுச் சந்தைகளை வழமையான சந்தைக் கட்டிடங்களுக்குக் கொண்டு செல்லலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், கொரோனா தொற்று காரணமாக பிற்பகல் 4 மணிவரை இயங்கி வந்த இப்பிரிவு தற்பொழுது மாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

மேலும் கொரோனா நோயாளர்கள் என சந்தேகத்தில் இதுவரை 189 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 32 பேர் கொரோனா நோயாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். மேலும்  இவ்வைத்தியசாலையில் 2825 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 311 பேர் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் அனேகமானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வருகைதந்தவர்களென கலாரஞ்சனி மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வரும் காத்தான்குடி தளவைத்தியசாலையில் 130 கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அங்கு 68 ஆண்களும், 27 பெண்களுமாக 95 கொரோனா நோயளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவ்வைத்தியசாலையில் காணப்பட்ட கழிவுநீர் அமைப்பு, மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இயந்திரம் போன்றவை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். எம். அச்சுதன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இதுதவிர மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேகர கருத்து தெரிவிக்கையில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கப்படுமாயின் வகுப்பறைகள் தொற்று நீக்கி விசிறப்படல்வேண்டும், நிலையான நிருவாக சபையொன்று செயல்பட்டு கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டுமெனவும், இதனை மீறுவோறுக் கெதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வர் எனவும் தெரிவித்தார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |