Home » » மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில்  கடமையாற்றி 03.06.2020 அன்று ஓய்வு பெற்றுச் சென்ற தம்பிராஜா அவர்கள் கதிராமன் இராசம்மா தம்பதியினருக்கு ஏழாவது மகனாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் எனச் சிறந்து விளங்குகின்ற  மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேற்றாத்தீவில்  04.06.1960ல் பிறந்தார்.  இவர் ஆரம்ப, இடை நிலைக்  கல்வியை தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திலும்  தனது உயர் கல்வியை பல கல்விமான்களை உருவாக்கிய அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குகின்ற  மட்/ களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையிலும் கற்று  தேற்றாத்தீவு களுதாவளை ஆகிய இரு கிராமங்களுக்கும் பெருமை சேர்த்தவர்.

இவர் புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் மீது தீராத பக்தி உடையவர்.  இளமையிலே துடிப்பும், விவேகமும், சாந்த குணமும் கொண்ட  இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது பட்டத்தை 31.10.1991ம் ஆண்டு பெற்றுக் கொண்டவர். இவர் ஆசிரியராக முதல் நியமனத்தை 03.05.1993ம் ஆண்டு மட்/வாகரை மகா வித்தியாலயத்தில் பெற்று தனது பணியை செவ்வனே நிறைவேற்றியவர். இளமைப் பருவம் இருந்தே முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றிய இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவகத்தில் பெற்றுக் கொண்டவர்.  இவர் 2000 ஆண்டில் குணலெட்சுமியைக் கரம்பிடித்ததன் பயனாக  இவருக்கு கிருத்திகா என்ற மகளும் உள்ளதோடு, இவரது மனைவி ஒரு ஆசிரியையுமாவார்.  இவர் அதிபராக 04.08.2000ம் ஆண்டு  மட்/காந்திபுரம் விபுலாநந்த வித்தியாலயம் களுதாவளையில் நியமனத்தைப் பெற்றவர். பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலையில்  15.04.2002ம் ஆண்டு வன்னியசிங்கம் அவர்கள் அதிபராக இருக்கின்ற வேளையில் இவர் பிரதி அதிபராக கடமையைப் பொறுப்பேற்றவர்.


திரு.வன்னியசிங்கம் அதிபர் அவர்கள் இந்தியா சென்றிருந்தவேளை தற்காலிக அதிபராக ஒருவருடம்  தனது பணியை சிறப்புறச் செய்தவர். பின்னர் வன்னிய சிங்கம் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்ற வேளையில் மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலைக்கு அதிபராக 22.09.2015 அன்று தனது கடமையைப்பொறுப்பேற்றார்.  இவருடைய காலத்தில் தனது சேவையை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், ஏனைய ஊழியர்கள்  அனைவருடனும்  சாந்தமான போக்கின் மூலமாக தனது நிருவாகத்தை திறம்படச் செய்து வெற்றிகண்டவர். மனிதநேயம் கொண்டவராகவும் இவர் காணப்படுகின்றார். 2500 மாணவர்களைக் கொண்ட  இப்பாடசாலையில் தனது காலத்தில் எதுவித பிரச்சினைகளும் வராமல் மிகச் சிறப்பாக தனது பணியை ஆற்றியவர். 

இவருடைய காலத்தில் கிழக்கு மாகாணத்திலே சிறப்புவாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய பார்வையாளர் அரங்கு, விஞ்ஞான ஆய்வுகூடம், சுற்றுமதில், முன் முகப்பு, ஆரம்ப பிரிவு மூன்று மாடிக்கட்டிடம் என பல வசதிகள்   பௌதீக வளங்களாகக் கிடைத்துள்ளன.  இவற்றைப் பெறுவதற்கு தன்னாலான அனைத்துப் பணிகளையும் முயற்சிகளையும் இவர் மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அடுத்து பரீட்சைப் பெறுபேறுகளை எடுத்து நோக்கினால் இவருடைய காலப்பகுதியில்  மூன்று தடவைகள்  5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில்  மாவட்ட  மட்டத்தில் முதலாம் இடத்தை மாணவர்கள் பெற்றுள்ளனர்.  அடுத்து க.பொ.த. (சா.த) ல் இரண்டு தடவைகள் 12  ஒன்பது ஏ சித்திகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.  இறுதியாக 2019ல் நடத்த க.பொ.த. (சா.த) பரீட்சையில்  ஏழு மாணவர்கள்    9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.  அத்துடன் க.பொ.த உயர்தரத்தில் பல  மாணவர்கள் வைத்தியத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் தெரிவு  செய்யப்பட்டுள்ளனர். அடுத்து  வர்த்தகம், கலைப் பிரிவுகளிலும் பெருவாரியான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதியுடையவர்களாக காணப்படுகின்றனர்.  இறுதியாக நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 2 மாணவர்கள் பொறியில் பீடத்திற்கும் 3 மாணவர்கள் வைத்தியப் பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.  அடுத்து விளையாட்டு, தமிழ்த் தினப் போட்டி மற்றும் ஏனைய போட்டிகளிலும் தேசிய மட்டம் வரையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு புகழ் தேடித்தர காரணமாக  இவர் இருந்திருக்கின்றார் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்த அதிபர் திலகமானவர் ஓய்வு பெறுகின்றார்.  ஓய்வு பெறும் இந்த நாளில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்கவும் இப்பாடசாலை மென்மேலும் வளர்ச்சியடையவும் ஆசிரியர்கள், அதிபர்கள் சிறந்த பணியினை மேற்கொள்ளவும்  தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தனது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்.  மேலும் புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் நாகேந்திரன் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |