Home » » மட்டக்களப்பில் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிவதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப்பெறும்

மட்டக்களப்பில் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிவதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப்பெறும்

மொட்டுக்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக வந்தாலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக வந்தாலும் இறுதியாக அவர்கள் சேரும் இடம் ராஜபக்ஸ குடும்பத்தின் ஆட்சியில் இருக்கும் ஆட்சி அதிகாரத்திலேயே போய் சேருவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் கோவிந்தன் கருணாகரமின் தேர்தல் அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

திருகோணமலை வீதியில் இந்த அலுவலகம் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளருமான என்.கமலதாசன்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கருணாகரம்,

2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கு குறிப்பாக வடகிழக்கு மக்களுக்கு ஒரு சவாலான தேர்தலாக இதை நாங்கள் எதிர்நோக்குகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 16அரசியற் கட்சிகளும் 22சுயேட்சைக் குழுக்களுமாக 38அரசியற்கட்சிகளில் 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 304 வேட்பாளர்கள் இந்த ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த 304வேட்பாளர்களும் தாங்கள் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். அதில் ஒருசிலர் அமைச்சராவோம் என்று தற்போதே கூறிக்கொள்கின்றனர். இந்த 38குழுக்களில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற மூன்று கட்சிகளையும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்ற மூன்று கட்சிகளையும் தவிர ஏனைய 32கட்சிகளும் ஐயாயிரம் வாக்குகளைத் தாண்டமாட்டார்கள் என்ற எண்ணப்பாடு மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் இருக்கின்றது. அதிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக மூன்று ஆசனங்களை பெறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

அதில் எங்களுக்கு இருக்கின்ற இலகுவான சவால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்றவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்திருக்கின்ற காரணத்தினால் இம்முறை 2004ஆம் ஆண்டைப்போல நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் மிக வெளிச்சமாக இருக்கின்றன.

அந்த மூன்று ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஐந்தாவது ஆசனத்தை கைப்பற்றுவதற்காக மொட்டுக் கட்சியில் போட்டியிடும் எட்டுத் தமிழ் வேட்பாளர்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிடும் எட்டுத் தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை உற்று நோக்கி சிந்திப்போமானால் இவர்களுக்குள்ள வாக்கு வங்கி நமக்குத் தெரியும். மொட்டுக் கட்சியில் வந்தாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் வந்தாலும் இவர்கள் போய் சேருகின்ற இடம் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியில் இருக்கின்ற ஆட்சி அதிகாரத்திலாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே இவர்கள் அனைவரும் இணைந்துதான் மொட்டுக்கு வாக்குச் சேர்த்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 38ஆயிரம் வாக்குகளைத்தான் மொட்டுக்கட்சி பெற்றது. இந்த 38ஆயிரம் வாக்குகளிலும் கிட்டத்தட்ட 7000வாக்குகள் சிங்கள மக்களுடையதாகும்.

சின்னவத்தை,கெவிலியாமடு,புளுக்குளாவ,மங்களகம,ரிதிதென்ன போன்ற பிரதேசங்களிலிருக்கின்ற 7000 சிங்கள மக்களுடையதாகும்.

அதைத் தவிர முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து கிடைக்கப்பெற்ற ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குள் ஆகும்.

இவை தவிர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் ஆதரவாளர்கள் ஒரு புறமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் ஒருபுறமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் சந்திரகுமார் அவர்களின் ஆதரவாளர்கள் ஒரு புறமும் சேர்த்த வாக்குகள் தான் மிகுதி வாக்குகளாகும்.

இத்தனை வாக்குகளும் இணைந்தால் தான் அந்த ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளலாம். 38ஆயிரம் வாக்குகளும் பிரிக்கப்படுகின்றபோது யாருக்கும் ஆசனம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இங்கில்லை. ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருஇலட்சத்து இருபத்து ஏழாயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தோம்.

நாங்கள் அதேயளவு வாக்குகளையோ அல்லது சற்று அதிகமாகவோ பெற்றால் நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் என்பது திண்ணமாகும்.

கடந்த காலங்களில் எமது இனம் அனுபவித்த துன்பங்கள் பற்றி நான் விவரிக்கவேண்டிய தேவையில்லை. அந்த அனர்த்தங்கள்,துன்பியல் சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் கண்கூடாக கண்டவர்கள். அவைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும்,எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு தீர்வு வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழவேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேரம் பேசும் சக்தியாக இந்த நாட்டில் மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை குறிப்பாக தற்போதைய ஜனாதிபதியின் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு மிகவும் பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருக்கின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று இந்த நாட்டை வித்தியாசமான கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதற்கு பிரயத்தனம் பண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதை நாங்கள் தடுக்க வேண்டும். நாங்கள் பேரம் பேசும் ஒரு சக்தியாக மாறினால் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு எங்களுடன் பேரம் பேசலாம். எங்களுடன் பேரம் பேசும்போது நாங்கள் எங்களுடைய மக்களின் தேவையை,அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிற்கும். அதற்கான ஆணையை நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொடுக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டிற்கு முன்னர் ராஜபக்ச அரசாங்கத்துடன் ஒட்டியிருந்தவர்கள் அவர்கள் எது செய்தாலும் தமிழ் மக்களுக்கு எதிராகவோ வடகிழக்கிற்கு எதிராகவோ எதை செய்தாலும் தட்டிக்கேட்கின்ற நிலையிலே இருக்கவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட கிழக்கு மாகாணத்தை பௌத்தமயமாக்குவதற்காக பௌத்த அடையாளங்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கு முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமால் குணரட்ன அவர்களின் தலைமையிலே ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளையும் பௌத்த பிக்குகளையும் கொண்ட ஒரு செயலணியை உருவாக்கியிருக்கின்றார்கள். நூறு வீதம் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திலே தொல்பொருள் ஆராய்ச்சியை செய்யவிருக்கின்றனர். இங்கு இருக்கின்ற பௌத்த அடையாளங்கள் என்றுகூறி அவர்கள் புதைக்கவிருக்கின்றனரோ அல்லது எடுக்க இருக்கின்றனரோ கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்குவதற்கு அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தச்செயல்களைக்கூட அவர்களுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் இதுவரை தட்டிக்கேட்கவில்லை. தட்டிக் கேட்பதற்கு வக்கில்லாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து அவர்களுடைய அடிவருடிகளாக இருந்து அவர்களுடன் இணங்கிச் சென்று எமக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை தட்டிக் கேட்கப்போகின்றார்களா என்ற கேள்வி எம் ஒவ்வொருவர் மத்தியிலும் எழவேண்டும்.

எனவே நாங்கள் அனைவரும் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, அதன் கரத்தை பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகம் இயங்கு நிலையில் இருந்தபோது அனைத்து இயக்கங்களும் அரசியற் கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களின் அரசியற் குரலாக உருவாக்கப்பட்டது.

இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியற் குரலாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகளுக்கு குரல் கொடுப்பதற்கும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் குரல் கொடுக்கக்கூடிய ஒரே சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அவர்களது கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டோமானால் கிழக்கு மாகாணத்தில் ஆறு அல்லது அதற்கு மேலாக ஏழு ஆசனங்களை பெற்றால் வடக்கு கிழக்கிலே கிட்டத்தட்ட 20ஆசனங்களை நாங்கள் பெறலாம். 20ஆசனங்களை பெற்றால் இந்த நாட்டில் பெரியதொரு சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும். எனவே எதிர்காலத்தில் ஒன்றிணைந்து நாங்கள் செயற்பட வேண்டும் என்றார் .
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |