நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலில் இருக்கும்.
அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருக்கிறது.
நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.
வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைப்படுத்த அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின்னர் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments