இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்துவரப்பட்ட பூதலுடல் அஞ்சலிக்காக நேற்று வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வேவண்டன் இல்லத்தில் வைத்து இன்று காலை ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன.
அதன்பின்னர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதன் போது நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும் வீதிகளில் இரு பக்கங்களிலும் காத்திருந்து மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, கொட்டகலை நகரமெங்கும் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அஞ்சலிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏனையோர் திருப்பியனுப்படுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நகரங்களில் எல்லாம் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தோட்டப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 Comments