Advertisement

Responsive Advertisement

எஸ்.எம்.எஸ் பட்டியலில் பெயர் இருந்தாலே புகையிரதங்களில் பயணிக்க அனுமதி

பருவகால சீட்டு கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தினால் SMS அனுப்பப்பட்டுள்ள, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் பெயர் குறிப்பிடப்பட்ட பட்டியலில் பெயர்களை கொண்டுள்ளவர்களுக்கு, நாளை மறுதினம் (11) புகையிரதங்களில் பயணிக்க அனுமதிக்கப்படும் என, புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன், கொவிட் -19 வைரஸ் பொதுமக்கள் மத்தியில் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும், புகையிரதங்களை பொதுமக்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
பயணிகள் புகையிரதங்களில் ஏறுவதற்கு முன்னர், ஒவ்வொரு புகையிரத நிலையங்களிலும், ஒவ்வொரு பயணியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.
பயணிகள் புகையிரதங்களில் ஏறுவதற்கு முன்னதாக, பெற்றுக்கொண்ட SMS ஐ காண்பிக்க வேண்டும் என்பதோடு, ஒவ்வொரு பயணியினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். SMS மூலம் ஒதுக்கப்பட்ட ஆசன இலக்கத்தை தவிர, பயணிகள் வேறு ஆசனங்களை மாற்ற முடியாது. இதன்போது எவருக்காவது கூடிய வெப்பநிலை, இருமல், தடிமன் காணப்பட்டால், அவர்கள் புகையிரத நிலையங்களினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, இதற்கு இணங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
அத்தோடு, புகையிரத திணைக்களத்தில் போதியளவான பாதுகாப்பு அதிகாரிகள் இன்மையால், கொவிட் -19 விசேட அதிரப்படையினரிடமிருந்து மேலும் பாதுகாப்பு அதிகாரிகளை தாம் கோரியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புக் கடமைகளுக்காக 600 இராணுவ வீரர்களை அதிரடிப்படையினர் நியமித்துள்ளதாகவும், ஒவ்வொரு பயணப் பெட்டியிலும் இரு இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பயணியும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு, இரண்டு பயணிகளுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும். புகையிரத நிலையத்திற்குள் நுழையும் முன்னதாக, பயணிகள் தங்களது கைகளைக் கழுவ வேண்டும்.
புகையிரத நிலையங்களிலிருந்தும் ஜன்னல்கள் ஊடாக குப்பைகளை வீசுதல் மற்றும் துப்புதலை தவிர்த்துக்கொள்ள வேண்டும். புகையிரத பெட்டிகளில் காணப்படும் மலசலகூடங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments