Home » » இலங்கை நிலப்பரப்பில் மீட்கப்பட்ட 2 ஆவது அதிகூடிய ஹெரோயின் தொகை - வெளியாகும் பல தகவல்கள்

இலங்கை நிலப்பரப்பில் மீட்கப்பட்ட 2 ஆவது அதிகூடிய ஹெரோயின் தொகை - வெளியாகும் பல தகவல்கள்

அத்தியாவசிய சேவை எனும் துண்டுக் குறிப்புடன் அரிசி உரைகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 271 கோடி ரூபா பெறுமதியான 225 கிலோ 969 கிராம் நிறைக் கொண்ட ஹெரோயின் போதைப் பொருளினை பொலிஸ்போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் படி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் சிறையில் உள்ள கொஸ்கொட தாரக எனும் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் தலைவனே சிறையிலிருந்து இந்த கடத்தலை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த தகவல் தருகையில்,
“தற்போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் ஊடாக போதைப்பொருள் நாட்டுக்குள் வரவாய்ப்பில்லை. எனினும் தென்கடல் பரப்பூடாக நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டு நாடு முழுதும் கடத்தப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் ஈரான், ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் எல்லைகளில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட ஹெரோயினே இவ்வாறு நாம் தற்போது கைப்பற்றப்பட்ட பொதிகளில் உள்ளவை என நாம் நம்புகின்றோம். இதற்கான சான்றுகள் உள்ளன.
அவ்வாறு கொண்டுவரப்பட்ட ஹெரோயின், அழகாக ஊதா நிறத்தை ஒத்த பானவகை குறித்த பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு பெக்கட்டின் சுமார் ஒரு கிலோ 137 கிராம் வரை உள்ளன. அவ்வாறு அடைக்கப்பட்ட 200 பக்கட்டுக்கள் நேற்று மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையில் உள்ளன.
பின்னர் அந்த போதைப் பொருள் பக்கட்டுக்களை மிக சூட்சுமமாக, 5,10 கிலோ அரிசி உரைகளில் மறைத்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த அரிசியில் மறைக்கப்பட்ட ஹெரோயினை பொதி செய்து, அத்தியாவசிய சேவைகள் எனும் துண்டுக் குறிப்புடன் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கு கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா நிலைமை காரணமாக ஊரடங்கு நிலைமை கடந்த காலத்தில் இருந்ததால் பல துறைகளின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
எனினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவர்களது நடவடிக்கைகளை அதன் போதும் எந்த சிக்கலும் இன்றி முன்னெடுத்துச் சென்றுள்ளமை இந்த கைதுகள் ஊடாக தெரியவந்துள்ளது. நாம் சற்று தாமதமாக அந்த இடத்துக்கு சென்றிருந்தால் கூட அத்தியாவசிய சேவைகள் என்ற துண்டுக் குறிப்புடன் அங்கிருந்து ஹெரோயின் கடத்தப்பட்டிருக்கும் என்றார்.
குறித்த கட்டிடத்திலிருந்து, நாட்டின் பல பகுதிகளுக்கு இந்த ஹெரோயின் தொகையை கடத்திச் செல்ல, சொகுசு காரும், கெப் வண்டியும் தயார் நிலையில் இருந்த நிலையில் அவையும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அரிசி உரையிலும் போதைப்பொருள் பக்கட் சூட்சுமமாக மறைக்கப்பட்ட பின்னரும் அரிசி உரையின் நிறை, வடிவம் உள்ளிட்ட எவையும் மாறா வண்ணமும், எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணமும் மீள அவ்வுரைகள் தைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் தொகையே இலங்கையில் நிலப்பரப்பில் மீட்கப்பட்ட 2 ஆவது அதிகூடிய ஹெரோயின் தொகையாகும் என பொலிஸார் கூறினர். இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |