நூருள் ஹுதா உமர்.
கொவீட்-19 கட்டுப்பாடுகளினால் வாழ்வாதாரம் வீழ்ச்சியைடைந்த அம்பாரை மாவட்டம் கல்முனை “கிறீன் பீல்ட்” சுனாமி வீட்டுத்திட்ட குடியிருப்பு மக்களுக்காக கொழும்பு "ஹமீடியா" நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று(மே 27) பிற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அவர்களினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வைபவ ரீதியாக கிறீன் கார்டன் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் நடப்பு ஆண்டு தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். ஏ. கலீலுர் ரஹுமானிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் இந்த குடியிருப்பின் தலைவர், மற்றும் நிர்வாகத்தினர் அபிவிருத்தி தொடர்பாக ஆளுநரின் கவனத்தை ஈர்த்து கலந்துரையாடியதோடு குடியிருப்பின் நேரிய முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான சில வேண்டுகோள்களையும் விடுத்தனர். அதனை ஆர்வத்தோடு கேட்டறிந்த ஆளுநர் அடையாளப்படுத்தப்பட்ட விடயங்களில் தனது பரப்பிற்குள் தன்னாலான முழு ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் வழங்குவதாக உறுதியளித்தார்.
குறுகிய காலத்தில் விடுக்கப்பட்ட நிவாரண வேண்டுகோளை ஏற்று ஏற்பாடு செய்தமை மற்றும் கிறீன் கார்டன் அபிவிருத்தி விடயங்கள் போன்றவற்றில் அக்கறை காட்டியமை என்பவற்றில் ஆளுநரின் மனிதாபிமான அணுகுமறையையும் ஆளுமையையும் பாராட்டி கிறீன் பீல்ட் மக்கள் சார்பில் நன்றி கூறினர்.
கிரீன் பீல்ட் என அழைக்கப்படும்"கிறீன் கார்டன்" வீட்டுத்திட்ட குடியிருப்பானது கல்முனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமையபெற்ற ஒரு கிராமமாகும். இந்த குடியிருப்பு அமையப் பெற்று சுமார் பத்து வருடங்களில் எந்த அபிவிருத்தியும் ஏற்படுத்தப்படாத இந்த நிலப்பரப்பில் வாழும் பெரும்பாலனவர்கள் இன்னும் வறுமைக்கோட்டின் எல்லைக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது என கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் நடப்பு ஆண்டு தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். ஏ. கலீலுர் ரஹுமான் தெரிவித்தார்.
0 comments: