நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய விளக்கமறியல் சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு தப்பியோடியிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகள் அனைவரும் பிரத்தியேக அறைகளில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதியானதன் பின்னரே சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர்.
இதன்பிரகாரம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மூவரும் தப்பியோடியுள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறிய சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்த மூவரும் அறையில் துளையிட்டு, நேற்று நள்ளிரவு 12.10 அளவில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தை அறிந்த சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விமானப் படையினரின் உதவியுடன் தப்பிச் சென்றவர்களை கைதுசெய்வதற்கான தேடுதலை நேற்று நள்ளிரவு மேற்கொண்டனர்.
இதன்போது நீர்கொழும்பு சிறைச்சாலை அருகில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கொட்டுவை மைதானத்தில் மறைந்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றைய சந்தேக நபர் நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் மறைந்திருந்தபோது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களில் இருவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments