(சித்தா)

இதன் பிரகாரம் முதலாவது நியமனத்தைப் பெற்று கிராமப்புறப் பாடசாலையான மட்,வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியராகக் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் 3 வருட காலம் அப்பாடசாலையில் மகிழ்வுடன் பணியாற்றினார். இயல்பாகவே சிறுவர்களுடன் அன்பாக பழகும் இவர் மாணவர்களின் மனங்களையும் வெகுவாகக் கவர்ந்தார். அத்துடன் பாடசாலைச் சமூகத்துடனும் நெருக்கமாகப் பழகி மாணவர்களின் கல்விக்காக உழைத்தார். மாணவர்களின் கல்வியின் பால் அக்கறை கொண்ட இவர் மாணவர்களை விடுமுறை காலங்களில் வீட்டுக்கு அழைத்துச் சென்று கல்வி புகட்டியமையும் இவரின் கல்விப் பணிக்கு ஓர் சான்றாகும்.
பிள்ளையை அறிந்து கொள்ளாவிட்டால் பாடங்களைப் புகட்டமுடியாது எனும் உளவியல் சிந்தனைக்கு அமைவாக வகுப்பறையில் செயற்பட்டு மாணவர்களின் அழியாச் செல்வமான கல்விக்குக்கு வித்திட்டார். இவர் அப் பாடசாலையிலிருந்து மாற்றலாகிச் செல்வதை விரும்பாத பெற்றோர் இடமாற்றத்தை இரத்துச் செய்யும் படியும் விண்ணப்பங்களைச் செய்தமையும் இவரின் சிறந்த கல்விப் பணிக்குச் சான்றாகும்.
தொடர்ந்து மட்/பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றிய வேளையில் 1987 ஆண்டில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டு இரு வருட காலம் பயிற்சியினை திறம்பட பூர்த்தி செய்து பயிற்சிபெற்ற ஆரம்பக் கல்வி ஆசிரியராக மட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அரச கொள்கைக்கு அமைவாக மட்/பெரியகல்லாறு மெதஸ்டிஸ்த்த மிஷன் பெண்கள் பாடசாலை, மட்/கோட்டைக்கல்லாறு கண்ணகி வித்தியாலயம் மட்/பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மட்/துறைநீலாவணை மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கல்விப் பணியினைத் தொடர்ந்தார். இக் காலப்பகுதியில் தனது அனுபவத்தின் மூலம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்வி புகட்டி அப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்காக உழைத்தார்.
ஆசிரியப் பணியில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் சேவையாற்றவேண்டிய வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது இந்த வகையில் ஆரம்பக் கல்விக்குரிய ஆசிரிய ஆலோசகராக 2012 ஆண்டிலிருந்து கடமை ஏற்று பணியில் ஓய்வு பெறும் வகையில் ஆரம்பக் கல்வி வளம்பெற உழைத்தார். ஆசிரியர்கள் இடர்படும் வேளை அவர்களின் வாண்மை விருத்திக்காக சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் பாடசாலை தரிசிப்புக்களின் போது மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்வதில் ஆர்வமாகவும் காணப்பட்டார். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் வலய மட்டத்திலான விசேட செயற்றிட்டங்களை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். தனது பணிக் காலத்தில் மேலதிகாரியின் ஆலோசனைகளை மதித்து பணிகளை மக்கள் சேவையாக கருதி உழைத்த திருமதி.சரோஜாதேவி - தில்லைநாதன் அவர்கள் இன்று (08.04.2020) அரசபணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
'உள்ளொன்று வைத்துப் புறமொன்றுபேசாத உத்தமியே – வாழ் நாளில்
உள்ளத்தால் பொய்யாதொழுகி எம் உள்ளங்களில் உறைந்தீர்கள்
பள்ளம் நாடும் அருவிபோல் மாணவர், ஆசிரியர் மனங்களில் நிறைந்தீர்கள்
அள்ளக் குறையாத அழியாசெல்வம் கல்வியில் மாணவரை உயர்த்தினீர்கள் வாழியவே!'
(கவிதை வரிகள் - க.சுந்தரலிங்கம், உதவிக் கல்விப் பணிப்பாளர்)
திரு.பா.வரதராஜன்
உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பக் கல்வி
பட்டிருப்பு கல்வி வலயம்.
0 Comments