தற்போது நாட்டில் கொரோனா அபாயம் நீங்கவில்லை என்றும், வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை பாரதூரமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்துரைத்த அவர்,
கொரோனா வைரஸ் தொடர்பில் நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உச்சகட்டத்தில் உள்ளது. குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவி்ட்டால் நிலைமை பாரதூரமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் அடையாளப்படுத்தப்பட்டதாகவும், அவர்களின் பெரும்பாலானோர் தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: