Home » » முஸ்லிங்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு விடிவைக் காண்பதற்கான ஒரே தெரிவு பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதே : மொட்டின் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா

முஸ்லிங்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு விடிவைக் காண்பதற்கான ஒரே தெரிவு பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதே : மொட்டின் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா



அபு ஹின்சா

'உலக வல்லரசுகளைக்கூட ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதுடன் அவை பலராலும் பாராட்டப்படுகின்றமை விசேட அம்சமாகும்' என திகாமடுல்ல மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
;உலகளவில் 20 இலட்சம் மக்கள் இந்நோய்க்குள்ளாகியிருப்பதுடன் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரது வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் சுகாதாரத் துறையினர் மற்றும் முப்படையினரின் அயராத, அர்ப்பணிப்பான சேவையினாலும் இலங்கை மக்களை பாரிய பாதிப்பிலிருந்து பாதுகப்பதற்கு துணை புரிந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மதித்து நடப்பதோடு, ஊரடங்குச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஜனாதிபதியின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கிவருவதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் எல்லோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சுகாதாரத் துறையினருக்கும் முப்படையினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்  கொள்கின்றோம்.

அம்பாறை மாவட்ட மக்கள் ஊரடங்கச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். வவாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு பல நிவாரண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சமுர்த்தி பயனாளிகள் உட்பட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அரசாங்கத்தின் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மக்கள் சுகாதார நடைமுறைகளையும் சமூக செயற்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.

மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சில கட்சிகள் விமர்சிக்கின்றன. கொவிட் 19 பிரச்சினை இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ந்து விடலாம். ஆனால் தேர்தலை மக்கள் முன் நின்று எந்நேரத்திலும் சந்திப்பதற்கு திராணியற்றிருக்கின்ற தோல்வி மனப்பாங்கிலுள்ள கட்சிகள்தான், இத்தருணத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமானதல்ல என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றன.

இருந்தாலும், இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் நேரடி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். அரசியலிலே இதற்கு முன்னர் பெரும் அனுபவத்தைக் கொண்டிராவிட்டாலும் எனது தந்தை மற்றும் பாட்டன் வழியில் நின்று அவர்களது ஆலோசனைகளை உள்வாங்கி எனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன். ஒரு இளைஞராக, இம்முறை அம்பாறை மாவட்டத்திலே புதிய வாக்காளர்களாக இணைந்துள்ள 23 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்களது அபிமானத்தை வெல்லக்கூடிய வகையில் எனது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதுடன் அவர்களது ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்.

பொதுஜன பெரமுன கட்சியிலே கல்முனை தொகுதியிலே நேரடி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எனக்கும் அதிஸ்டவசமாகவே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகக் கருதுகின்றேன். இந்த ஆசன ஒதுக்கீட்டிலே நாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை எதிர்த்து பெற்றெடுத்துள்ளோம். பொதுஜன பெரமுன கட்சியின் நேரடி வேட்பாளரான என்னை ஆதரிப்பதே அரசை அதுரிப்பதாக அமையும். தேசிய காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிடுகிறது. ஆவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவில்லை. அவர்கள் நிச்சயமாக ஒரு ஆசனத்தையும் பெறமாட்டர்கள். அவர்களை ஆதரிப்பதனால் எந்தப் பயனும் இல்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலையும் அதுவே. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிலவேளைகளில் ஒரு ஆசனத்தைப் பெறலாம் அதுவும் நிச்சயம் இல்லை. ஆனால் மாவட்டத்தில் 4 ஆசனங்களைப் பெற்று பொதுஜன பெரமுன வெற்றியீட்டும். இதில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்காளிகளாக இணைந்துகொள்ள வேண்டும். எப்போதும் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிப்பவர்களாக இருக்காமல் மிக நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்கவுள்ள இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம் மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்த முன்வரவேண்டும்.

எமது சமூகம் எதிர்நோக்குகின்ற பல இன்னல்களை தற்போதைய பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதன் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை நமது சமூகம் இப்போது புரிந்துள்ளது. நமது முஸ்லிம் தலைமைகள் சமூகத்தை பிழையான வழியில் இட்டுச் சென்றதை மக்கள் அறிவீர்கள். கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமூகம் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு விடிவைக் காண்பதற்கான ஒரே தெரிவாக பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதேயாகும். இதன்மூலம் இம்மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய நல்ல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு இம்மாவட்ட மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகளும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதனையும் சமூகத்திற்காகச் செய்யவில்லை. இறைவனின் நாட்டத்தால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு திட்டமிட்ட அடிப்படையில் பல முன்மாதிரியான அபிவிருத்தி திட்டங்களை யெற்படுத்துவோம்' என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |