Home » » கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுதான் வழி - சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுதான் வழி - சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்


பூமிப்பந்தில் உள்ள அத்தனை பேருக்கும் இப்போது ஒரே ஒரு எதிரிதான் பொதுவான எதிரி.
இந்த எதிரிக்கு பெயர், கொரோனா வைரஸ்!
இந்த எதிரியை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அதனால்தான் இந்த ஒற்றை எதிரிக்கு எதிராக உலகளாவிய போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எதற்கும் அஞ்சாமல், தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள், பல நாடுகளிலும் இந்த எதிரி வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் உலகுக்கே புரியாத புதிராக இருக்கிறது.
கொரோனா வைரஸ், சீன நாட்டில் பரவத்தொடங்கியதுமே அங்கு வாழ்ந்து வந்த இந்தியர்கள் குறிப்பாக வேலை பார்த்து வந்தவர்கள், படித்து வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்றுதான் குரல் கொடுத்தனர். பயம், பீதி, தவிப்பு அத்தனையும் அவர்களிடம் வெளிப்பட்டது.
இதையடுத்து சீன அரசுடன் இந்தியா தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு வாழ்ந்து வந்த சுமார் 700 இந்தியர்களை இருமுறை ஏர் இந்தியா விமானங்களில் அழைத்து வந்து சேர்த்தது. இங்கே இரு வார காலம், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டபோதும்கூட, “தாய் மண்ணில் கால் பதித்ததே போதும், இதுவல்லவா சொர்க்கம்” என அந்த இந்தியர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

அதே நேரத்தில் “ம்கூம், நாங்கள் இந்த மண்ணை விட்டு வர மாட்டோம், இங்கே இருந்து கொரோனா வைரஸை சமாளித்து காட்டுவோம்” என்று சொல்லிக்கொண்டு, அந்த வைரஸ் தோன்றிய உகான் நகரில் இன்றும் வசித்து வருகிற இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் துணிச்சலுக்கு என்ன விருது கொடுத்து பாராட்டுவது என்றே தெரியவில்லை.
அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.
“எங்கள் வாழ்வில் இந்த 76 நாட்களும் கடினமான தருணங்கள். இந்த புதன்கிழமைதான் நாங்கள் வசிக்கிற உகான் நகரில் ஊரடங்கு விலக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எங்கள் 76 நாள் துன்பம் முடிந்து இப்போதுதான் மகிழ்ச்சி பிறந்திருக்கிறது” என்று சிரிக்கிறார்கள்.
உகான் என்பது, 1 கோடியே 10 லட்சம் பேர் வாழ்கிற நகரம். கொரோனா வைரஸ் என்ற எதிரிக்கு பயப்படாமல், நெஞ்சில் உரத்துடன் உகான் நகரில் வாழ்ந்து வருகிற இந்தியர்களில் ஒருவர்தான், நீரியல் உயிரி துறை விஞ்ஞானி, அருண்ஜித் டி சத்ரஜித். இவர் கேரளாவை சேர்ந்தவர்.
“73 நாட்களாக நான் என் அறையில்தான் அடைபட்டுக் கிடந்தேன். இப்போதுதான் வெளியே வந்துள்ளேன். அடைபட்டுக் கிடந்த கால கட்டத்தில் நான் யாருடனும் அதிகமாக பேசவில்லை. எல்லோருமே தங்கள் தங்கள் அறைகளில் அடைபட்டுக் கிடந்ததால் என்னுடன் பேசுவதற்கே ஆள் இல்லை. எனவே இப்போது பேசுவதற்கே கஷ்டப்படுகிறேன்” என்கிறார் இந்த அருண்ஜித் டி சத்ரஜித்.
ஏன் தாய்நாடு திரும்பவில்லை?
பிறகு ஏன் அவர் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை?
அவரே சொல்கிறார்.
“டிசம்பர் இரண்டாவது வாரத்தில்தான் உகானில் ஒரு கொடிய வைரஸ் தோன்றி பரவி வருகிறது என்று எனக்கும், எனது நண்பர்களுக்கும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மக்களிடம் பீதி நிலவியது. எல்லோரும் முக கவசங்களை அணியத் தொடங்கினார்கள்.
பொதுவாகவே ஒரு இடத்தில் கஷ்டம் ஏற்படுகிறபோது, அங்கிருந்து வருவது என்பது, அதில் இருந்து தப்பிப்பது போலாகும். அப்படி செய்வது இந்தியர்களுக்கு அழகு இல்லை. எனவேதான் நான் இங்கேயே இருந்து துணிச்சலுடன் போராடுவது என முடிவு செய்தேன்.
அது மட்டுமல்ல, நான் ஊர் திரும்பினால், அது எனது மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, என் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் என அத்தனை பேருக்கும் ஆபத்தானது என்றும் நினைத்தேன்.
இந்தியா 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது, சரியான செயல்தான்.
ஆனால் பருவமழை காலத்தில் மக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறபோது அது பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் இந்த வைரஸ், மேலும் அபாயகரமானதாக மாறக்கூடும்.
இந்த உகான் நகரம் வழங்கும் பாடம், கண்டிப்பான ஊரடங்கு உத்தரவை பின்பற்றியதும், மக்கள் தங்களைத்தாங்களே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதும்தான்.
இப்போது ஊரடங்கை விலக்கிய பின்னரும்கூட, அறிகுறிகள் இல்லாமலேயே அந்த வைரஸ் தாக்குகிறது என்று தகவல்கள் வெளியாகி இருப்பதால் மக்கள் இன்னும் வீடுகளை விட்டு வெளியே வர தயங்குகிறார்கள்.
கொரோனா வைரஸைப் பொறுத்தமட்டில் அதைப்புரிந்து கொள்ளுவது என்பது எளிதானது அல்ல. முதலில் யாருக்கு தாக்கியது என்பதை கண்டறிகிற வரையில் இந்த வைரசைப் பற்றி அறிவதும் கடினம்தான்.
ஆரம்பத்தில் சீனர்கள் இதைப்பற்றி தெரியாததால் வழக்கம்போல இயங்கினர். ஆனால் அதைப்பற்றி தெரிய வந்ததும் அதற்கேற்ப செயல்பட ஆரம்பித்தனர்”.
இவர் கூறுவதை அப்படியோ எதிரொலிக்கிறார், அதே உகானில் வசித்து வருகிற பெயர் கூற விரும்பாத மற்றொரு இந்திய விஞ்ஞானி. அவர் சொல்வது-
“நான் எனது அறையில் 72 நாட்கள் அடைபட்டுக் கிடந்தேன். என் பக்கத்து வீட்டுக்காரருக்கு 3 சின்னக் குழந்தைகள். அவர்கள், அவர்களது வீட்டில் இருந்து ஒரு முறைகூட வெளியே வந்ததை நான் பார்க்கவில்லை.
இன்றைக்கு நான் உயிர்பிழைத்து நிம்மதியாக இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் இன்றைக்கும் நான் வெளியே பழையபடி செல்ல விரும்பவில்லை. இந்த வைரசை பரப்ப அது ஒரு வழியாகி விடலாம்.
நான் இந்திய மக்களுக்கு சொல்வதற்கு ஒரு ஆலோசனை உண்டு. ஊரடங்கை நீங்கள் அனைவரும் கண்டிப்புடன் பின்பற்றுங்கள்.
இதே உகானில் சில தினங்கள் முன்கூட்டியே ஊரடங்கு போட்டிருந்தால் காட்டுத்தீ போல இந்த வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும்.
இங்கு எனக்கு நல்லதொரு விருந்தோம்பல் அனுபவம் கிடைத்தது. எனது முதலாளி, எனது உள்ளூர் நண்பர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது” என்கிறார்.
கொரோனா வைரஸ், உகானில் உள்ள கடல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்கிற சந்தையில் இருந்துதான் தோன்றியதாக இதுவரை நம்பப்படுகிறது.
இந்த வைரஸ், உகானில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்தது.
ஒட்டுமொத்த சீனாவுக்கும் இது பரவியபோதும் அங்கு உயிர்ப்பலி எண்ணிக்கை என்னவோ 3 ஆயிரத்துக்கு சற்று அதிகம்தான்.
அங்கு பலி குறைந்திருக்க காரணம், அவர்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வந்த பாங்குதான் என்பதை இந்த விஞ்ஞானிகளின் அனுபவத்தில் இருந்து அறிய முடிகிறது.
இதை இங்கே வாழ்கிற ஒவ்வொருவரும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஊரடங்குதானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டால் அதற்கு கொடுக்கக்கூடிய விலை அதிகமாகி விடும்.
ஊரடங்குக்கு அடங்குவது விவேகம்.
தற்போது உயிர் காக்கும் ஒரே மந்திரம், ஊரடங்கில் அடங்கி இருங்கள் என்பதுதான்.
- Maalai Malar
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |