Home » » நீதவான் மற்றும் 7 பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

நீதவான் மற்றும் 7 பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்


எம்பிலிப்பிட்டிய பிரதான நீதவானை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
பிரதான நீதவானின் கணவர், வெலிசரை கடற்படை முகாமில் கடமையாற்றி வரும் அதிகாரி என்பதுடன் அவர் கடந்த 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி எம்பிலிப்பிட்டியவில் உள்ள நீதவானின் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார்.
இதன் காரணமாக நீதவானை அவரது இல்லத்திலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நீதவானின் கணவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்றியிருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
நீதவானின் கணவர் கடந்த 20 ஆம் திகதி வெலிசரை கடற்படை முகாமுக்கு திரும்பிச் சென்றுள்ளார். கடந்த 22 ஆம் திகதி வெலிசரை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி நீதவான் கடமைக்கு சென்றுள்ளதுடன் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய சில வழக்குகளை விசாரித்து விட்டு அவற்றை ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து நீதவான் தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் தன்னை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.
நீதிசேவைகள் ஆணைக்குழுவும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு நீதவானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதேவேளை நீதவானின் கணவர், வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்கு கடமையில் இருந்த எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 7 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் கடமையாற்றும் எவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்ற போதிலும் ஏனையோருடன் பழகாது தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சபரகமுவை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |