கொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் மற்றும் கொரோனா கட்டுப்படுத்தல் வேலைத்திட்டத்தில் கடமையாற்றிய சுமார் 200 பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் சிலர் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலம் முழுவதும் நபர்களை கைது செய்தல், வீதி சோதனை சாவடிகளில் கடமையாற்றுதல், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களை கண்காணித்தல் உட்பட பல சேவைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் போது சாதாரண மக்களுடன் பழக வேண்டிய சூழ்நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டது எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுடன் சம்பந்தப்பட்டு செயற்பட்ட முப்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பொலிஸாருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தலைமையகத்தின் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வடமாகாணத்தில் படையினர் பாடசாலைகளை கோரிவரும் நிலையில் பொலிசாரும் தற்போது பாடசாலைகளைக் கோரி வருகின்றனர்.
அதற்கமைய பொலிஸ் நிலையங்களிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் மக்கள் தொடர்பாடல்களை ஏற்படுத்தி அங்கே மக்களிற்கான பணிகளையாற்றும் சமயம் பொலிஸ் நிலையங்களை பாதுகாக்க முடியும் எனப் பொஸார் கருதுகின்றனர்.
இதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும், கிளிநொச்சியிலும் முதல்கட்டமாக கோரியுள்ளபோதிலும் அவற்றினை வழங்க பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் பொலிசாரிற்கு இதுவரை பாடசாலைகள் வழங்காதபோதிலும் இது தொடர்பான அழுத்தங்கள் தொடர்வதாக கல்விச் சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.
இதேநேரம் விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காக ஏற்கனவே படையினர் அதிக பாடசாலைகளை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: