Home » » அக்கரைப்பற்று பிரதேசத்தில் 12 நாட்களின் பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டது மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 12 நாட்களின் பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டது மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்


(வி.சுகிர்தகுமார்) 
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அக்கரைப்பற்று பிரதேசம் முடக்கப்பட்டது. தொற்றுக்குள்ளான இருவரில் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மற்றவரின் உடல் நிலையும் தேறி வருவதாக அறியமுடிகிறது. மேலும் இப் பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என புதிதாக எவரும்  இனங்காணப்படாததை தொடர்ந்து இப் பிரதேசம் விடுக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையங்கள் யாவும் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறான சுமூக நிலை இன்று உருவானதை அவதானிக்க முடிந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச சபை, பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட அரச அமைப்புக்கள்; ஒன்றிணைந்த பிரதேச கொரோனா பாதுகாப்பு செயலணிக்கூட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே குறித்த சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.

இதன் பயனாக இன்று சந்தையில் சமூக இடைவெளி சிறந்த முறையில் பேணப்பட்டதுடன் மக்கள் தேவையான பொருட்களை நியாயமான விலைகளில் பெற்றுக்கொண்டனர். ஆயினும் ஒரு சில இடங்களில் பொருட்களின் விலை உயர்வாக காணப்பட்டதையும் அறிய முடிந்தது.

இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலனின் பணிப்புரையின் பேரில் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சந்தையில் மேற்பார்வை நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

பிரதேச சபையும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கியதுடன் உத்தியோகத்தர்களும் குறித்த கடமைகளில் இணைந்திருந்தனர்.

இது இவ்வாறிருக்க பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சந்தையானது தர்மசங்கரி மைதனத்திற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் குறித்த ச்ந்தைப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு நியாயமான விலைக்கு பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது காலத்தின் தேவை என்பது இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.


அக்கரைப்பற்று பிரதேசத்தில் 12 நாட்களின் பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |