சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனாவுக்கு வெளியே பலியானவர்கள் ஆவர்.
இந்த வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக மனிதர்களிடையே கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ”அபாயகரமான கொரோனா வைரஸ் குறித்து சீனா தெரிவிக்கவில்லை. கொரோனா குறித்து சில மாதங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சீனாவில் எந்தப் பகுதியில் நோய்த் தொற்று தொடங்கியதோ, அங்கேயே கட்டுப்படுத்தி இருக்க முடியும். அவர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லததால், உலகமே மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு ஏற்கெனவே இதுகுறித்துத் தெரிந்திருந்தால், ஓரிடத்தில் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். இப்போது அனைத்து நாடுகளும் இதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இது மிகவும் மோசமான ஒன்று” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனாவை சீன வைரஸ் என்று ட்ரம்ப் கூறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.