Home » » கொரோனா வைரஸ் குறித்த இலங்கையின் தற்போதைய நிலை

கொரோனா வைரஸ் குறித்த இலங்கையின் தற்போதைய நிலை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 73 வயதுடைய வயோதிபரும், 13 வயது சிறுமியும் அடங்குகின்றனர். குறித்த வயோதிபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேவேளை, குறித்த சிறுமி கொழும்பு, அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் நாட்டில் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுற்றுலா வழிகாட்டியின் மகள் ஆவார்.
200 இற்கும் மேற்பட்டோர் கொரோனா சந்தேகத்தில்
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 200 இற்கும் மேற்பட்டோர் கணிகாணிக்கப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரும் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை, பொலனறுவை வைத்தியசாலை மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
1,700 இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இலங்கையில் கொரோனா அபாயத்தால் வௌிநாட்டவர்கள் உள்ளிட்ட 1700 இற்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது 12 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்படுகின்றன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவருக்கும் 'கொரோனா'
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என இன்று உறுதிப்படுத்தப்பட்ட 10 பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரியும் அடங்குகின்றார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரி தற்போது கொழும்பு, அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஏனைய அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை சுய கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |