Home » » கொரோனா வைரஸும் மட்டக்களப்பு அரசியலும் -ஒரு வைத்தியரின் ஆதங்கம்

கொரோனா வைரஸும் மட்டக்களப்பு அரசியலும் -ஒரு வைத்தியரின் ஆதங்கம்

இந்தப் பதிவானது எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதற்காக நேற்று இதை எழுதவில்லை. ஆனாலும் இன்று மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்களால் ஒரு வைத்தியராக என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை.

சிறுவயதில் அம்புலன்ஸ் சத்தம் கேட்டால் அதனில் உள்ள நோயாளி விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்வேன். பின்னர் ஒரு வைத்தியராக அவ் வண்டியில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது ஒருவிதமான திருப்தி ஏற்படும்.
ஆனாலும் அம்புலன்ஸ் வண்டியில் அரச வைத்தியசாலைக்கு வரும் நோயாளியை தங்களது சுயநலத்திற்காக திருப்பி அனுப்பிய சமூகத்தில் நான் வாழ்கிறேன் என்று நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இதை உள்ளூர் அரசியல் வாதிகளும் தங்களுக்கு ஏற்றால்போல் பயன்படுத்திக்கொள்வது மிகவும் பாரதூரமானது. இதனால் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சற்று விளக்கம் இல்லாமலேயே இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் ஆனது உலகளாவிய ரீதியில் மிக வேகமாக பரவி வருகின்றதை மறுக்க முடியாது. எனவே உலக நாடுகளில் உள்ள இலங்கையர்களும் இங்கு வர நினைப்பது சாதாரணமானதே.
அதனால் அவர்களை சிறிது காலம் தனிமைப்படுத்தி வைத்து அவதானிக்க வேண்டியது கட்டாயமாகின்றது. அந்த அவதானிக்கும் இடமானது மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு பிரதேசமாக இருக்க வேண்டும்.
ஆனாலும் அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் எல்லோருக்கும் நோய்த்தொற்றுக்கு உள்ளாக்குவது இல்லை. அதாவது உதாரணமாக ஒரு மாதத்துக்கு முன்னர் சீனாவில் இருந்து வருகை தந்த மாணவர்கள் அனைவரும் நோய்த்தொற்று இல்லாமல் அவதானிப்பின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறானதொரு பின்னணியிலேயே அவர்கள் புனாணையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நோய்த்தொற்றக்குரிய அறிகுறிகளை வெளிப்படுத்தும், வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் மட்டும் அண்மையில் உள்ள பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.
அதிலும் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படும் இடத்து அவர்கள் கொழும்பிலுள்ள தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள். இதுதான் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குமுறை.
அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களை பராமரிப்பது இராணுவத்தின் கடமையாக பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இராணுவத்தினரும் எம்மைப்போல் சாதாரண மனிதர்களே. அவர்கள் இக்கொடிய நோயானது இலங்கை முழுவதும் பரவுவதை தடுப்பதற்காக தங்களை அர்பணித்துள்ளனர்.
இன்று மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து திரும்பும் நபர்களை அவர்களுடைய வீட்டுக்குச் செல்ல அனுமதித்தால் இந்நோய் பரவும் வேகம் எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஏனென்றால் சீனாவிலிருந்து கொழும்புக்கு வந்த வைரசுக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?
அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன நடக்கும்?
இல்லையென்றால் உங்களுக்கோ அல்லது உங்களுடைய உறவினருக்கோ கொரோனா தொற்று ஏற்படும் பொழுது நீங்கள் அவர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா?
அப்படி என்றால் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற பின்னர் எங்களது வைத்தியசாலைக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் நின்று இரத்தம் கொடுத்தது அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காக மட்டுமா?
ஆக எமது மனிதநேயத்தை அளவிடுவதற்கு ஒரு சிறு வைரஸ் போதுமானதா?
ஏற்கனவே இலங்கையில் ஐந்து பேருக்கு இந்நோய் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கொழும்பிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கோடையில் உள்ள அந்த வைத்தியசாலை ஆனது மக்கள் செறிவுடைய பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. அங்குள்ள மக்கள் எவரும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்யவில்லை தானே.
நாம் இனம் மதம் பிரதேசம் என்று பிரிந்து நின்றால் வைரஸுக்கு இலகுவாகிவிடும் அல்லவா?
எம்மை நாமே அழித்துக் கொள்வதா?
இந்த கொடிய நோயை குறுகிய நோக்கத்துக்காக மக்கள் பிரதிநிதிகள் கையில் எடுத்துக்கொள்வது பொருத்தமாகுமா?
எமது மாவட்டத்தில் இருந்து கண்டி, கொழும்பு போன்ற பிற வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளிகளுக்கு அவர்கள் இதயசுத்தியுடன் எதிர்காலத்தில் சிகிச்சை அளிப்பார்கள் என்பது நிச்சயமா?
இவ்வாறான செயற்பாடுகள் எமது வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
அல்லது இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மட்டக்களப்பை இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என நம்புகிறீர்களா?
ஆனாலும் கடந்த காலத்தில் எமது வைத்தியசாலையைப் பற்றியும், வைத்தியஙர்களைப் பற்றியும் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் களங்கப்படுத்திய பொழுதும், இந்த நோயானது நோயாளர்களை நேரடியாக தொடுவதன் மூலம் பரவும் என்று தெரிந்திருந்தும் எமது வைத்தியர்களும் தாதியர்களும் மற்றைய சுகாதார உத்தியோகத்தர்களும் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நோயாளிகளை பராமரிப்பதற்கு தயாராகி விட்டார்கள் அல்லவா?
ஒரு வைத்தியராக நான் இதில் பெருமை அடைகிறேன்.
எனவே சுயநலம் பற்றியே எப்பொழுதும் சிந்திக்காமல் சற்று பொதுநலத்துடன் நடந்து கொள்வோமேயானால் என்றால் சிங்கப்பூர் போன்ற நாடுகளை போன்று நாங்களும் இந்த வைரஸினை வெற்றி கொள்ளலாம்.
Dr. விஷ்ணு சிவபாதம்,
MBBS, DCH, MD Paediatrics
குழந்தைநல மருத்துவ நிபுணர்,
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |