Home » » அம்பாறையில் இராணுவத்தின் உதவியுடன் தயாராகிறது 80 பேருக்கான கொரோனா முகாம்!

அம்பாறையில் இராணுவத்தின் உதவியுடன் தயாராகிறது 80 பேருக்கான கொரோனா முகாம்!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது . போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட மட்டில் இடம்பெற்று வருகிறது . இன்று காலை முதல் மதியம் 2 மணி வரை பலசரக்கு கடைகள் மருத்து நிலையங்கள் சில திறக்கப்பட்டிருந்தது. பொலிஸ் நிலையம் பிரதேச செயலகத்தில் வியாபார அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் வழமைபோன்று நகரப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு இருந்தபோதிலும் பின்னர் அரசாங்கத்தின் அவசர உத்தரவு காரணமாக மேற்குறித்த மருந்தகங்கள் பலசரக்குக் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. கல்முனை- மட்டக்களப்பு பிரதான வீதி வெறிச்சோடி காணப்படுகிறது . அத்துடன் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை கல்முனை கல்முனைக்குடி சாய்ந்தமருது பகுதிகளில் உள்ள முக்கிய சந்திகளில் பாதுகாப்பு தரப்பினர் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் இன்று முஸ்லிம்களின் ஜும்மா தொழுகை காலம் ஆகையினால் எந்த பள்ளிவாசல்களிலும் ஜும்மா தொழுகை இடம்பெறவில்லை .தற்போது மீன்பிடி நடவடிக்கைகள் கூட மந்தகதியில் இந்த பகுதிகளில் இடம்பெறுவதை காண முடிந்தது. குறிப்பாக கல்முனை கல்முனைக்குடி சாய்ந்தமருது பகுதிகளில் மீனவர்கள் எவரும் தொழிலுக்குச் செல்ல வில்லை என்பதுடன் தோணிகள் வலைகளும் கரையோரங்களில் காணப்பட்டன.
மேலும் இப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை அறிவூட்டி வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
மேலும் தற்போதும் எமது பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக காணப்பட்ட போதிலும் எமது சுகாதார நடைமுறைகள் இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் வைரஸின் தாக்கம் எமது பிரதேசத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்காக இலங்கை கடற்படையினரின் உதவியுடன் எமது பூரண ஆதரவுடன் ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கின்றோம்.
தேவையேற்படின் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனக் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |