Home » » ஒரு தமிழனை சுட்டுக்கொன்ற இராணுவத்துக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

ஒரு தமிழனை சுட்டுக்கொன்ற இராணுவத்துக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு


திருகோணமலை - மூதூர், பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி - இக்பால் நகர், ஏழாம் கட்டை பகுதியைச் சேர்ந்த மொஹிதீன் முகம்மது நிபாஸ் (50 வயது) என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூதூர் 58ஆவது இராணுவ முகாமில் கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 19ஆம் திகதி இவர் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை நிரூபணமான நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்திலேயே நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குற்றவாளியான 50 வயதுடைய மொஹிதீன் முகம்மது நிபாஸ் என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட மூதூர் - பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா மனோகரனின் (41 வயது) குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும், அதனை செலுத்த தவறினால் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |