Home » » 35 வருட அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்றார் சாய்ந்தமருது எ.எல்.எம்.சலீம் !!

35 வருட அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்றார் சாய்ந்தமருது எ.எல்.எம்.சலீம் !!


நூருல் ஹுதா உமர்.

கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய எ.எல்.எம். சலீம் இன்று முதல் ஓய்வு பெறுகிறார்.

இவர் சாய்ந்தமருதூரை பிறப்பிடமாகக் கொண்டவர். சாய்ந்தமருது கமு/அல்-ஜலால்
 மற்றும் மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை கற்று, அதன்பின் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் உயர் கல்வியைக் கற்றார். 

பயிற்றப்பட்ட ஆசிரியராக லுனுகலை சோலேன்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது அரச சேவை நியமனத்தைப் பெற்ற இவர் ஒரு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். அதன்பின் தான் கல்வி கற்ற பாடசாலையான கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் ஆசிரியராக இடமாற்றம் பெற்று கடமையாற்றினார். இதன் போது இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் தேறியதன் காரணமாக பிரதியதிபராக அதேபாடசாலையில் பதவியுயர்வு பெற்றார். 

இதே காலத்தில் இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையிலும் சித்தியெய்தி  நிருவாக சேவையில் இணைந்து திருகோணமலையில் 1996ஆம் ஆண்டு உதவி காணி ஆணையாளராக நியமனம் பெற்றார். இப்பிரதேச வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் இலங்கை நிருவாக சேவை இரண்டிலும் சித்தியெய்திய ஒரேயொரு நபராக இவரே காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே ஆண்டில் கொழும்பு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் உதவிக் கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தபோது சுவிச்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவிற்கான முதல் செயலாளராக 2001/2002ஆம் ஆண்டில் சேவையாற்றி இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் அத்தியவசிய தேவைகளை சிறந்த முறையில் கையாண்டமை குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னர் 2004 வரை விஞஞான தொழிநுட்ப அமைச்சின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றிய இவர், ஜனாபதி செயலகத்திலும் இணைக்கப்பட்டு சேவையைத் தொடர்ந்தார். 2005 வரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதன் பின்னர், 2007ஆம் அண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றினார். 

இக்காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 2016 முதல் மேலதிக செயலாளராக சட்டம் ஒழுங்குகள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சில் கடமையாற்றி இன்று வரை கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிலும் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார். அத்துடன் சிறிது காலம் ஏற்றுமதி சபையின் பதில் தலைவராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவர் பொது நிர்வாகத்துறையில் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் சிறி ஜயவர்த்தனபுர மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் முதுமானிகளைப் பெற்று கல்வியில் உயர்நிலையை அடைந்தவர்.

தொழிற்துறையை பொறுத்தவரை பயிற்றப்பட்ட ஆசிரியராக, கல்வி நிருவாக சேவை அதிகாரியாக மற்றும் இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக இருந்து பல பிரதேசங்களிலும் கடமையாற்றியதோடு வெளிநாடுகளிலும் பணிபுரிந்தவர்.

அந்த வகையில் ஆசிரியர் துறையில் கல்முனை சாஹிராக் கல்லூரியில் தடம் பதித்து தொடர்ந்து ஸாஹிராக் கல்லூரியின் வளர்ச்சியிலே தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். அங்கு கட்டொழுங்கு, விடுதி போன்றவற்றின் பொறுப்பாசிரியராகவும், பிரதி அதிபராகவும் பல சேவைகளை மேற்கொண்டவர். 

கொழும்பு குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் உதவி கட்டுப்பாட்டாளராக இணைந்து பலவாறான உதவிகளை இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சேவை செய்தவர். 

அத்துடன் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் உதவிச் செயலாளராக இருந்த காலங்களில்  சம்மாந்துறை, சாய்ந்தமருது விதாதா வள நிலையங்கள் உருவாகுவதற்கு காரணமானார், அத்தோடு தகவல் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக இருந்து ஊடகத்துறைக்கு உதவி புரிந்தவர்.

சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில், பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலங்களில் சுனாமிக்குப் பின்னரான பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். அந்த வகையில் சாய்ந்தமருதில் சுனாமிக்குப் பின்னர் வொலிவேரியன் என்ற கிராமத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றி மக்களுக்கு தேவையான  அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரும்பாடுபட்டார்.

எமது பிரதேச நன்மைகருதி  பல கருத்திட்டங்களை மேற்கொண்டு சேவையாற்றி வரும் இவர் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்தபோது இரண்டு பாடசாலைகள்  சாய்ந்தமருது  கோட்டத்தில் உருவாகுவதற்கு கால்கோளாக இருந்தார். இப்பிரதேசத்தில் இரண்டு விளையாட்டு மைதானங்கள், இளைஞர்களின் மேம்பாட்டிற்காக வள நிலையம், VTA, NAITA மற்றும் தையல் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தினார். 

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 1000 வீடுகளை அமைப்பதற்கும், அவ்வீடுகளை சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுத்து பல்வேறு நிவாரணங்களையும் மக்களுக்கு கிடைக்கச் செய்தார். மேலும் சாய்ந்தமருது பிரதேசத்தில் 15, 17ம் பிரதேச பிரிவுகளை உள்ளடக்கியதாக மையவாடியை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்ததோடு மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் என்று பாராது அனைவரது தேவைகளையும் உடனுக்குடன் கேட்டறிந்து எண்ணிலடங்கா  சேவைகளை மக்களுக்காக செய்தார். 

அத்தோடு இன்றுவரை பல்வேறு சமூக சேவை முன்னெடுப்புகளிலும் ஈடுபட்டு வரும் இவர் முக்கியமாக அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பாஸ்போர்ட் பிரச்சினைகள், ஆள் அடையாள அட்டைப் பிரச்சினைகள், தொழில் வழிகாட்டல்கள் என்று  பல்வேறு சேவைகள், அபிவிருத்திகள், முன்மொழிவுகள், ஆலோசனைகளை மக்களுக்கு வழங்கி வருகிவரும் இவர் 2020.01.31ஆம் திகதி 35 வருட அரச சேவைப் பூர்த்தியுடன் தனது சொந்த விருப்பின் பேரில் ஓய்வுநிலையை அடைகின்றார்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |